‘விதிகளை பின்பற்றாமல் பேனர் வைக்க அனுமதிக்காதீர்..’ தமிழக அரசுக்கு ஐகோர்ட் போட்ட ஸ்ட்ரிக்ட் உத்தரவு – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: விதிகளைப் பின்பற்றாமல் எந்த பேனரும் வைக்க அனுமதிக்கக் கூடாது எனத் தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரத்தில் முன்னாள் எம்எல்ஏ இல்லத் திருமணத்திற்கு அமைச்சர் பொன்முடியை வரவேற்று பேனர் வைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 12 வயது சிறுவன் தினேஷ் மின்சாரம் தாக்கி பலியானார்.

கடந்த ஆகஸ்டில் நடந்த இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு விழுப்புரத்தில் சட்டவிரோதமாகப் பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரியும், பலியான சிறுவனுக்கு உரிய இழப்பீட்டை வழங்கக் கோரியும் விழுப்புரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

பல்லாவரத்தில் மீண்டும் பேனர் கலாச்சாரம்.. காற்றில் அலைபாய்வதால் மக்கள் அச்சம்.. விடிவு எப்போது?பல்லாவரத்தில் மீண்டும் பேனர் கலாச்சாரம்.. காற்றில் அலைபாய்வதால் மக்கள் அச்சம்.. விடிவு எப்போது?

திமுக விளக்கம்

இந்த வழக்கு தொடர்பாகத் தமிழ்நாடு அரசு, திமுக உள்ளிட்டோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இவ்வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், உயர் நீதிமன்றம் பேனர்கள் வைக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளதால், பேனர்கள் வைக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளப் போவதில்லை என திமுக தலைவர் அறிவித்ததாகவும், அவர் முதல்வராகப் பதவியேற்ற போதுகூட பேனர்கள் வைப்பது தவிர்க்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

அரசு தரப்பு வாதம்

மேலும், விழுப்புரம் சம்பவத்தைப் பொறுத்தவரைச் சிறுவனை பணிக்கு அமர்த்தியது காண்ட்ராக்டர் தான் எனவும், அவர் தரப்பில் பலியான சிறுவனின் குடும்பத்துக்கு 1.50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, காண்ட்ராக்டர் கைது செய்யப்பட்டதாகவும், தற்போது அவர் ஜாமீனில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

சட்டம் உள்ளது

சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பேனர்கள் வைப்பதை முறைப்படுத்தச் சட்டம் உள்ளதாகவும், அதன்படி விதிமீறிச் செயல்படுபவர்களுக்குச் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சொல்வது மட்டும் போதாது

இதையடுத்து, சட்டவிரோதமாகப் பேனர் வைக்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், பேனர் வைக்கும் நிகழ்ச்சிகளில் முதல்வர் கலந்து கொள்ள மாட்டார் எனக் கூறுவது மட்டும் போதாது என்றும் கடுமையான நடவடிக்கையும் எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், ஆளுங்கட்சி மட்டுமல்லாமல், அனைத்து கட்சிகளையும் சேர்த்துச் சொல்வதாகவும் தெரிவித்தனர்.

பேனர் வைக்க அனுமதிக்கக் கூடாது

அனைவரும் அனுமதி பெற்றே பேனர்கள் வைப்பதாக நினைக்கவில்லை எனக் கூறிய நீதிபதிகள், அனுமதி பெறாதவர் மீது யாரிடம் புகார் அளிக்க வேண்டும்… அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனவும் கேள்வி எழுப்பினர். அரசியல்வாதிகள் மட்டுமல்ல மற்றவர்களும் பேனர்கள் வைப்பதாகக் கூறிய நீதிபதிகள், பலியான சிறுவனின் குடும்பத்துக்கு அரசு இழப்பீடு வழங்கி விட்டு, சம்பந்தப்பட்ட கட்சியிடம் வசூலிக்க வேண்டும் என மனுதாரர் கோருவது போல உத்தரவிட முடியாது என மறுத்து விட்டனர். பின்னர், விதிகளைப் பின்பற்றாமல் எந்த பேனரும் வைக்க அனுமதிக்கக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நான்கு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

English summary
Madras High court about banner culture in tamilnadu. Madras High court’s latest updates in tamil.

Source: https://tamil.oneindia.com/news/chennai/madras-high-court-ordered-officials-not-to-allow-any-banners-placed-without-following-rules-440892.html