1000 ரவுடிகள் பட்டியல் தயார்: எல்லை மீறினால் என்கவுண்டர்- சென்னை போலீஸ் அதிரடி நடவடிக்கை – Maalaimalar தமிழ்

சென்னைச் செய்திகள்

கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நபர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னையில் ரவுடிகளை ஒழிக்க காலம் காலமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகரை கலக்கிய அயோத்திகுப்பன் வீரமணி உள்ளிட்ட பல ரவுடிகள் போலீசாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகியுள்ளனர்.

போலீசாரின் இந்த ரவுடிகள் வேட்டை தொடர்ந்து கொண்டே இருந்த போதிலும் புற்றீசல் போல ரவுடிகள் புதிது புதிதாக உருவாவதும், அவர்களை போலீசார் ஒடுக்குவதும் வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில் பல்வேறு பகுதிகளிலும் ரவுடிகள் தலையெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக தென் சென்னை, மத்திய சென்னை, வடசென்னை என பாரபட்சமின்றி சிறுவயதிலேயே குற்றச்செயல்களில் ஈடுபடும் பலர் ரவுடிகளாக உருவெடுத்து கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவது தடுக்க முடியாததாகவே மாறி இருக்கிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சமீபத்தில் நடந்துள்ள கொலை சம்பவங்களில் இளம்வயதினர் பலர் ஈடுபட்டு கைதாகி இருப்பதே இதற்கு சான்றாக அமைந்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் மடிப்பாக்கம் பகுதியில் தி.மு.க. பிரமுகர் செல்வத்தை இளம் வயது இளைஞர்கள் சுற்றி வளைத்து மிகவும் துணிச்சலாக கொலை சம்பவத்தை அரங்கேற்றியது போலீஸ் அதிகாரிகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதையடுத்து சென்னையில் ரவுடிகள் பட்டியலை முழுமையாக சேகரித்து தலைமறைவு ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கமி‌ஷனர் சங்கர்ஜிவால் அதிரடியாக உத்தரவிட்டார்.

இதன்படி சென்னை மாநகர் முழுவதும் ரவுடிகள் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 1000-க்கும் மேற்பட்ட ரவுடிகளை பட்டியல் எடுத்துள்ள போலீசார் அவர்கள் பற்றிய விவரங்களை டிஜிட்டல் மயமாக்கும் பணியில் தீவிரம் காட்டி உள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை மாநகர துணை கமி‌ஷனர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டுள்ளன. ‘உங்கள் பகுதியில் தலைமறைவாக உள்ள ரவுடிகள், சிறையில் இருந்து சமீபத்தில் விடுதலையான ரவுடிகள் ஆகியோரது பட்டியலை முழுமையாக சேகரித்து வைத்திருக்க வேண்டும் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு துணை கமி‌ஷனர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் ‘ரவுடிகள் சரித்திர பதிவேடு’ பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பதிவேட்டில் இடம்பெற்றுள்ள குற்றவாளிகளில் எத்தனை பேர் சிறையில் இருக்கிறார்கள்? எத்தனை பேர் மீது கொலை வழக்குகள் உள்ளன?

தலைமறைவாக இருக்கும் ரவுடிகள் எத்தனை பேர்? என்பது தொடர்பான அனைத்து தகவல்களையும் புள்ளிவிவரங்களுடன் தயாராக வைத்திருக்க உத்தரவிட்டிருப்பதை தொடர்ந்து இந்த பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

ரவுடிகளை பொறுத்த வரையில் ஏ பிளஸ், ஏ, பி, சி என 4 பிரிவுகளாக ஏற்கனவே பிரித்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் உள்ள அனைத்து ரவுடிகளின் நடவடிக்கைகளையும் தீவிரமாக கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தங்கள் பகுதியில் பெரிய தாதாவாக வேண்டும் என்கிற எண்ணத்தில் இளம் குற்றவாளிகள் பலர் அடிதடி உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதும் கண்டறியப்பட்டுள்ளது.

இது போன்ற நபர்களின் நடவடிக்கைகளை முளையிலேயே கிள்ளி எறியும் வகையில் அதிரடியான நடவடிக்கைகளை போலீஸ் இன்ஸ்பெக்டர்களிடம் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதன்படி அனைத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களும் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அடிதடி மற்றும் ரகளையில் ஈடுபடும் சிறிய ரவுடிகளின் கொட்டத்தை ஒடுக்க தேவையான நடவடிக்கைகளையும் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

போலீசாரின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு பயப்படாமல் எல்லை மீறும் ரவுடிகளை என்கவுன்டரில் போட்டுத்தள்ளவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘சென்னையில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படியே ரவுடிகள் ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நபர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தப்புவதற்கு அடைக்கலம் கொடுக்கும் நபர்களே மூளையாக செயல்பட்டிருப்பது பல வழக்குகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே ரவுடிகளுக்கு யார் அடைக்கலம் கொடுத்தாலும் குற்றச்செயல்களுக்கு உடந்தையாக இருந்ததாக அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். சென்னை போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை ரவுடிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் உள்ள சட்டம்-ஒழுங்கு போலீசார் ரவுடிகள் வேட்டையில் ஈடுபடுவதை போன்று சென்னை மத்திய குற்றப் பிரிவில் உள்ள ‘ரவுடி ஒழிப்பு பிரிவு’ போலீசாரும் அதிரடி காட்டி வருகிறார்கள். அவர்களும் ரவுடிகளை தனித்தனி பிரிவுகளாக பிரித்து பட்டியல் போட்டு வைத்துள்ளனர்.

இவர்களது பிடியில் 325 பெரிய தாதாக்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் குற்றவாளிகளை கூட்டு சேர்த்துக்கொண்டு ‘கேங்ஸ்டர்’ போல செயல்பட்டு வருபவர்கள் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[embedded content]

Source: https://www.maalaimalar.com/news/topnews/2022/03/09120442/3560029/Tamil-news-1000-rowdies-list-ready-Encounter-if-the.vpf