சென்னை துறைமுகத்தின் ரூ.45 கோடி மோசடி வழக்கு: 11 பேர் கைது – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை துறைமுகம் இந்தியன் வங்கியில் நிரந்தர வைப்பு கணக்கில் வைத்திருந்த ரூ.45 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்குத் தொடர்பாக, 11 பேரை அமலாக்கத்துறை கைது செய்தது.

சென்னை துறைமுகத்தின் சார்பில் கோயம்பேடு இந்தியன் வங்கி கிளையில் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிரந்தர வைப்புக் கணக்கில் ரூ.100 கோடி செலுத்தப்பட்டது. பணம் போடப்பட்ட 3 நாள்களுக்கு பின்னர் கணேஷ் நடராஜன் என்பவர் சென்னை துறைமுகத்தின் துணை இயக்குனர் என்று அறிமுகம் செய்துகொண்டு, பல்வேறு ஆவணங்கள்,சான்றிதழ்கள் வங்கியில் தாக்கல் செய்து, நிரந்தர வைப்பு கணக்கில் இருக்கும் ரூ.100 கோடி பணத்தை இரு நடப்பு கணக்குகளுக்கு மாற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

ஆவணங்களை பரிசீலனை செய்த வங்கி நிர்வாகம், தலா ரூ.50 கோடியாக இரு நடப்பு கணக்குகளுக்கு மாற்றியது. அந்த நடப்பு கணக்குகளில் இருந்து பணம் 34 வங்கி கணக்குகளுக்கு உடனடியாக மாற்றப்பட்டன.

ரூ.45 கோடி மோசடி

இதற்கிடையே, நிரந்தர வைப்பு கணக்கில் திடீரென பணம் மாற்றப்பட்டு வருவது குறித்த தகவலறிந்த துறைமுக அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் தொடர்புக் கொண்டு விவரத்தை கேட்டனர். அப்போது தான் மோசடிக் கும்பல் போலி ஆவணங்கள், சான்றிதழ்கள் மூலம் பணத்தை மோசடி செய்திருப்பது வங்கி அதிகாரிளுக்கும், துறைமுக அதிகாரிகளுக்கும் தெரிய வந்தது.

இதையடுத்து வங்கி நிர்வாகம், அந்த பண பரிமாற்றம் அனைத்தையும் நிறுத்தியது. இருப்பினும் அந்தக் கும்பல், அதற்குள் ரூ.45  கோடியை பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றி மோசடி செய்தது.

இந்த மோசடி குறித்து சென்னை சிபிஐ, கணேஷ் நடராஜன், விருகம்பாக்கத்தைச் சேர்ந்த தரகர் மணிமொழி, கோயம்பேடு இந்தியன் வங்கியின் கிளையின் மேலாளர் சேர்மதி ராஜா உள்ளிட்ட பலர் மீது வழக்குப் பதிவு செய்தது.

அமலாக்கத்துறை விசாரணை

இந்நிலையில் இந்த வழக்குத் தொடர்பாக மத்திய ஆப்பரிக்க நாடான கேம்ருனைச் சேர்ந்த பெளசிமா ஸ்டீவ் பெர்டிரன்ட் யானிக், காங்கோ நாட்டைச் சேர்ந்த முஸ்ஸா இலுங்கா லூசின் உள்பட 15 பேரை சிபிஐ கைது செய்தது.

இந்த வழக்கில் நிகழ்ந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்கை பதிவு செய்து, விசாரணை செய்தது. மேலும் வழக்குத் தொடர்பாக மாநிலம் முழுவதும் 15 இடங்களில் அமலாக்கத்துறையும் சோதனை செய்தது. இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் மூலம் வாங்கப்பட்ட 230 ஏக்கர் நிலம், வீட்டுமனைகள், வாகனங்கள், தங்கநகைகள் உள்ளிட்டவற்றை அமலாக்கத்துறை கடந்த டிசம்பர் மாதம் முடக்கியது.

11 பேர் கைது

இந்த வழக்கில் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக, இந்த வழக்கில் ஏற்கெனவே சிபிஐயால் கைது செய்யப்பட்ட முக்கிய எதிரிகள் 11 பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இதில் பி.வி.சுடலை முத்து, மணிமொழி, கணேஷ் நடராஜன், ஜெ.செல்வகுமார், கே.ஜாகிர் உசேன், எம்.விஜய் ஹெரால்டு, எம்.ராஜேஷ் சிங், எஸ்.செய்யது, சுரேஷ்குமார், ஏ.சேர்மதிராஜா, அருண் அன்பு ஆகிய 11 பேரை கைது செய்திருப்பதாக அமலாக்கத்துறை புதன்கிழமை அறிவித்தது.

இவ்வழக்கு தொடர்பாக 11 பேரையும் விரைவில் தங்களது காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. அதேபோல வழக்கில் பிற நபர்களையும் கைது செய்ய அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருகிறது.

Source: https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2022/mar/09/chennai-port-rs-45-crore-fraud-case-11-arrested-3804909.html