கரோனா தடுப்புப் பணிகளுக்கு மட்டும் ரூ.310 கோடி செலவு செய்த சென்னை மாநகராட்சி – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை மாநகராட்சி கடந்த ஆண்டில் கரோனா தடுப்புப் பணிகளுக்கு மட்டும் ரூ.310 கோடி செலவு செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கரோனா தொற்றின் 2-வது அலை உச்சத்தில் இருந்தது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்ட வந்த காரணத்தால் பலருக்கும் மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்காத நிலை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து ‘கோவிட் கேர் மையங்கள்’ உள்ளிட்ட பல கரோனா சிகிச்சை மையங்களை தமிழக அரசு உருவாக்கியது. சென்னையில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட பள்ள, கல்லூரிகளில் கோவிட் கேர் மையங்கள் உருவாக்கப்பட்டது. இதன் காரணமாக கரோனா தொற்று தடுப்புப் பணிகளுக்கு மட்டும் கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சி ரூ.310 கோடி செலவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இதில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்க மட்டும் மாநகராட்சி சார்பில் ரூ.41.53 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. மருந்து மற்றும் முகக்கவசம் உள்ளிட்ட பொருட்கள் வாங்க ரூ.72.57 கோடியும், கருவிகள் வாங்க ரூ.1.78 கோடியும் செலவு செய்யப்பட்டது.

கரோனா தொற்று மருத்துவர்கள், செலவியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், வீடு வீடாகச் சென்று காய்ச்சல் சோதனை செய்தவர்கள் என்று மொத்தம் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் சென்னை மாநகராட்சிப் பணியில் அமர்த்தப்பட்டனர். இதற்கு மட்டும் ரூ.116.72 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

இதைத்தவிர்த்து வாடகைக் கணக்கில் ரூ.45.59 கோடி, மின் அமைப்புகள் அமைக்க ரூ.5.51 கோடி, பிற செலவுகளுக்கு ரூ.26.79 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி கடந்த ஆண்டு கரோனா தடுப்புப் பணிகளுக்கு மட்டும் சென்னை மாநகராட்சி ரூ.310.49 கோடி செலவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/786721-chennai-corporation-has-spent-rs-310-crore-on-corona-prevention-work-last-year.html