மேலே செல்லும் கேபிள்கள் இல்லாத சென்னை: மாநகராட்சி அதிரடி முடிவு – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் மேலே செல்லும் கேபிள்களை எல்லாம் புதைவட கேபிள்களாக மாற்ற சென்னை மாநகராட்சி விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளது.

சென்னை மாநகராட்சியில் தொலைத் தொடர்பு மற்றும் இணைய சேவை வழங்கும் நிறுவனங்களின் கேபிள்கள் அனைத்தும் மேலே செல்லும் வகையில்தான் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மாநகராட்சி தெரு விளக்குகளை இணைத்துதான் இந்த கேபிள்கள் செல்லும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கும். இதன் காரணமாக ஒவ்வொரு தெரு விளக்கும் கம்பங்களிலும் பல கேபிள்கள் தொங்கிக் கொண்டு இருக்கும்.

தெருக்களில் பெரிய வாகனங்கள் செல்ல இந்த கேபிள்கள் மிகவும் இடையூறாக இருக்கும். இந்த கேபிள்களை அனைத்தையும் புதைவட கேபிளாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “சென்னையில் 15 நிறுவனங்கள் OFC என்று அழைக்கப்படும் என்று ஆப்டிக்கல் பைபர் கேபிள்களை மேலே கொண்டு செல்கின்றன. இதன் காரணாக பல இடையூறுகள் எற்படுகிறது.

சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் மாநகராட்சியை புதுப் பொலிவாக மாற்றியமைக்கும் திட்டத்தின் கீழ் இந்த கேபிள்களை புதைவட கேபிளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்டமும் தயார் செய்யப்பட்டுள்ளது. இதன்படி இனிமேல் பேருந்து சாலைகள், உட்புற சாலைகளில் அமைக்கும் அனைத்து கேபிள்களையும் புதைவடமாக மட்டும்தான் அமைக்க வேண்டும் என்ற விதி வகுக்கப்படவுள்ளது.

பேருந்து சாலைகளில் தற்போது மேலே செல்லும் கேபிள்களை உடனடியாக புதைவட கேபிளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். உட்புற சாலைகளில் உள்ள கேபிள்களை ஆண்டுக்கு 20 சதவீதம் என்ற அடிப்படையில் அடுத்த 5 ஆண்டுகளில் புதைவட கேபிள்களாக மாற்ற வேண்டும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர்கள் கூறினர்.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/834030-chennai-without-overhead-cables-chennai-corporation-orders-action-against-telecom-companies.html