‘சென்னை சங்கமம் திருவிழா’ கோலாகல தொடக்கம் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை,

தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் ‘சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா’ நிகழ்ச்சி சென்னை தீவுத்திடலில் நேற்று மாலை தொடங்கியது.

நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வரும் கனிமொழி எம்.பி. வரவேற்றார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்காக தீவுத்திடலில் பிரமாண்டமான கலை அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த கலை அரங்கில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான நையாண்டி மேளம், கரகாட்டம், பறையாட்டம், புரவியாட்டம், காவடியாட்டம், புலியாட்டம், தோடர் நடனம், மயிலாட்டம், சிலம்பாட்டம், வில்லுப்பாட்டு, நாட்டுப்புற பாடல்கள் என பல்வேறு கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சுமார் 1 மணி நேரம் அனைவரும் வியக்கும் வகையில் இந்த கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. இதனை மு.க.ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் ரசித்து பார்த்தார்.

மகிழ்ச்சி

இதன்பின்பு கலை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை கவுரவிக்கும் விழா நடைபெற்றது. தமிழக சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் சந்தரமோகன் வரவேற்றார்.

கலை நிகழ்ச்சியை முன்னின்று நடத்தியவர்களுக்கு மு.க.ஸ்டாலின் நினைவுப்பரிசு வழங்கி பாராட்டினார். விழாவில் அவர் பேசியதாவது:-

ஒரு திருவிழாவில் எப்படி எல்லோரும் மகிழ்ச்சியாகவும், குதூகல மனநிலையோடு இருப்பார்களோ அப்படித்தான் நம்முடைய நம்ம ஊரு திருவிழாவிலும் நாம் எல்லோரும் கலந்துகொண்டு இன்றைக்கு மகிழ்ச்சியாக இருந்து கொண்டிருக்கிறோம்.

கலைகளை வளர்த்தது திராவிட இயக்கம்

கலைகள் என்பது வசதி படைத்த வர்க்கத்தின் பொழுதுபோக்கு அம்சம் என்று இருந்த நிலையை அடியோடு மாற்றி, அவற்றை அடித்தட்டு மக்களிடத்தில் எடுத்துச் சென்றது திராவிட இயக்கம்தான்.

திராவிட இயக்கம் தான் கலை வடிவங்கள் மூலமாக சாமானிய மக்கள் வாழ்க்கையில் அனுபவித்த வலியைப் பேசியது. திராவிட இயக்கம் கலைகளை வளர்த்தது, கலைகளால் வளர்ந்தது.

கலைகளின் வளர்ச்சிக்கும், கலைஞர்கள் வாழ்வில் மலர்ச்சிக்கும் கண்ணும் கருத்துமாய் கணக்கற்ற திட்டங்களைச் தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது.

ரூ.9 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பாக சென்னை மற்றும் 10 மாவட்டங்களில் ‘பொங்கல் கலைவிழாக்கள்’ நடத்த 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மூலம் அதிகமான கலைஞர்கள் பயன்பெறும் வண்ணம், மன்றத்திற்கான நல்கைத் தொகை 3 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கெல்லாம் மகுடம் சூட்டுவதைப் போல ‘நம்ம ஊரு திருவிழா’ என்ற பெயரில் தமிழ்நாட்டின் தலைநகரமாக இருக்கக்கூடிய சென்னையிலும், கலை பண்பாட்டு மண்டலங்களின் தலைமை இடங்களாக இருக்கக்கூடிய காஞ்சீபுரம், திருச்சி, கோயம்புத்தூர், சேலம், தஞ்சாவூர், மதுரை, நெல்லை ஆகிய நகரங்களிலும், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கலைவிழாக்கள் நடத்த 9 கோடியே 84 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரூ.5 ஆயிரமாக உயர்வு

இந்த விழாவில் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் ஒவ்வொரு கலைஞருக்கும் இதுவரை வழங்கப்பட்ட ஒருநாள் மதிப்பூதியத்தை 2 ஆயிரம் ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க இருக்கிறோம்.

தமிழர்களாக நாம் ஒன்று சேருவதற்கு நம்முடைய கலைகள்தான் இணைப்புப் பாலங்களாக அமையும். எனவே, கலையை வளர்ப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நினைவுப்பரிசு

முன்னதாக மு.க.ஸ்டாலினுக்கு, ஜல்லிக்கட்டு காளை போன்ற நினைவுப்பரிசினை கனிமொழி வழங்கினார்.

விழாவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன், ராமச்சந்திரன், சேகர்பாபு, கயல்விழி செல்வராஜ், மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் வாகை சந்திரசேகர், அரசின் முதன்மை செயலாளர் இறையன்பு, கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் எஸ்.ஆர்.காந்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiUGh0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vTmV3cy9TdGF0ZS9jaGVubmFpLXNhbmdhbS1mZXN0aXZhbC1raWNrcy1vZmYtODc4NjQ20gFUaHR0cHM6Ly93d3cuZGFpbHl0aGFudGhpLmNvbS9hbXAvTmV3cy9TdGF0ZS9jaGVubmFpLXNhbmdhbS1mZXN0aXZhbC1raWNrcy1vZmYtODc4NjQ2?oc=5