சென்னை போரூர் – பவர்ஹவுஸ் இடையே நடைபெறும் மெட்ரோ ரயில் பாதை பணிகளில் தாமதம் – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோரயில் திட்டத்தில், பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் வரையிலான 4-வது வழித்தடத்தில், போரூர்-பவர்ஹவுஸ் இடையே பாதை அமைக்கும் பணியில், பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்ரூ.63,246 கோடியில், 118.9 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் ஒரு வழித்தடம் கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வரை 16 கி.மீ. தொலைவுக்கு உயர்நிலைப் பாதையாகவும், 10.1 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதையாகவும் அமையவுள்ளது.

மொத்தம் 30 மெட்ரோ ரயில் நிலையங்கள் இதில் இடம்பெற உள்ளன. பூந்தமல்லியில் பணிமனை அமைய உள்ளதால், இந்த வழித்தடம் அமைக்கும் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன.

குறுகலான சாலை…

பூந்தமல்லி முதல் பவர்ஹவுஸ் வரையிலான பணிகளை விரைவாக முடித்து, மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கக் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பாதையை 2 பகுதிகளாகப் பிரித்து, பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பூந்தமல்லி மற்றும் போரூர் இடையே பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், போரூர்-பவர் ஹவுஸ் இடையே கட்டுமானப் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பாதையில் சாலையின் அகலம் குறுகலாக உள்ளதால், நிலம் கையகப்படுத்துவதும், போக்குவரத்தை மாற்றி அமைப்பதும் மிகவும் அவசியமாகும்.

இதுதவிர, கழிவுநீர்க் குழாய்கள், மின்சார மற்றும் தொலைபேசி கேபிள்கள் போன்றவற்றை மாற்றியமைக்க வேண்டும். இதற்கான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

குறித்த காலத்தில் முடிக்கப்படும்

பொதுப் போக்குவரத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு, இப்பணிகளை குறித்த காலத்தில் முடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiV2h0dHBzOi8vd3d3LmhpbmR1dGFtaWwuaW4vbmV3cy90YW1pbG5hZHUvOTMzMjI1LXBvcnVyLXBvd2VyaG91c2UtbWV0cm8tdHJhaW4td29ya3MuaHRtbNIBAA?oc=5