என்ன ஒரே பனிமூட்டமா இருக்கு.. இருளாக மாறிய சென்னை சாலைகள்.. போகிப் பண்டிகையால் கடும் புகை! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: போகிப் பண்டிகை காரணமாக சென்னையின் சாலைகள் காலையில் இருந்து புகை மூட்டமாக காட்சி அளிக்கின்றன. இதனால் சாலையில் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முதல் நாள் எப்போதும் தமிழ்நாட்டில் போகி பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.

பழையன கழிதலும்.. புதியன புகுதலும் என்ற கொள்கைக்கு இணங்க தமிழ்நாடு முழுக்க மக்கள் பழைய பொருட்களை துறந்து, வீடுகளை சுத்தம் செய்து, புதிய வாழ்க்கையை தொடங்குவதுதான் போகி பண்டிகையின் நோக்கம்.

போகி பண்டிகை: டயர், பிளாஸ்டிக் பொருட்களை எரித்தால் ரூ.1000 அபராதம்.. சென்னை மாநகராட்சி வார்னிங்!போகி பண்டிகை: டயர், பிளாஸ்டிக் பொருட்களை எரித்தால் ரூ.1000 அபராதம்.. சென்னை மாநகராட்சி வார்னிங்!

போகி

பழைய துணிமணிகள், பாய்கள், டயர்கள் போன்றவற்றை எரித்து மக்கள் கொண்டாடுவது வழக்கம். சில இடங்களில் மக்கள் பொருட்கள் எதையும் எரிக்காமல் தீ மூட்டி அதன் முன்பு அமர்ந்து கொண்டாடுவதும் வழக்கம். தமிழ்நாடு முழுக்க இன்று அதிகாலையில் இருந்து மக்கள் போகி பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். அதிகாலையில் இருந்தே மக்கள் பலர் சாலை ஓரங்களில் பழைய பொருட்களுக்கு தீ வைத்து இந்த விழாவை கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள்.

மாசு

இந்த நிலையில் போகி பண்டிகையால் தமிழ்நாட்டில் பெரு நகரங்களில் கடுமையான காற்று மாசு ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மக்கள் பொருட்களை எரித்து வருவதால் சாலைகளில் கடுமையான புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. போகிப் பண்டிகை காரணமாக சென்னையின் சாலைகள் காலையில் இருந்து புகை மூட்டமாக காட்சி அளிக்கின்றன. இதனால் சாலையில் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் அவதி

பனி மூட்டம் காரணமாக ஏற்கனவே சாலைகளில் வெளிச்சம் இல்லை. இந்த நிலையில் புகை மூட்டமும் சேர்ந்து கொண்டதால் மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளானார்கள். சென்னையில் மட்டும் இந்த நிலை கிடையாது மற்ற மாவட்டங்களிலும் இதே நிலைதான். சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் சாலைகள் புகைமூட்டமாக காட்சியளிக்கின்றன. மக்கள் பழைய பொருட்களை எரித்து வருவதால் சாலைகள் புகைமூட்டமாக காட்சியளிக்கின்றன.

அபராதம்

முன்னதாக மாசு இல்லாமல் போகி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று பொதுமக்களிடம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கோரிக்கை விடுத்தது. மக்களுக்கு சுவாச பிரச்சனை ஏற்படும் என்பதாலும், கொரோனா காலம் என்பதாலும், பழைய டயர் மற்றும் டியூப்கள், துணிகள், ரப்பர் பொருட்கள், காகிதம், ரசாயணம் போன்ற பொருட்களை எரிப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கோரிக்கை விடுத்தது.

மாவட்ட ஆட்சியர்

அதேபோல் பல்வேறு மாவட்ட ஆட்சியர்களும் மாசு இல்லாத போகி பண்டிகையை கொண்டாடுங்கள் என்றும் மக்களிடம் கோரிக்கை விடுத்தனர். போகி பண்டிகை அன்று சென்னையில் டயர், பிளாஸ்டிக் பொருட்களை எரித்தால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுவித்தது. முதன் முறையாக இந்த ஆண்டுதான் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் பலர் பொருட்களை தொடர்ந்து எரித்து வருவதால் சென்னையே பனிமூட்டமாக காணப்படுகிறது.

English summary
Bogi Festival: Smoke creates fog in the roads in Chennai, Madurai and other cities of Tamilnadu.

Source: https://tamil.oneindia.com/news/chennai/bogi-festival-smoke-creates-fog-in-the-roads-in-chennai-madurai-and-other-cities-445260.html