400 ஆண்டுகள் பழையான சிலைகள் சென்னையில் மீட்பு – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னையில் 400 ஆண்டுகள் பழைமையான 10 சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் மீட்டனா்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பழைமையான சுவாமி சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தமிழக காவல் துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி சைலேஷ் குமாா் யாதவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த அப்பிரிவு போலீஸாருக்கு அவா் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, துணைக் கண்காணிப்பாளா்கள் முத்துராஜா, மோகன் தலைமையிலான போலீஸாா் ராஜா அண்ணாமலைபுரம் 7-ஆவது முதன்மைச் சாலை, முதல் குறுக்குத் தெருவில் உள்ள ஷோபா துரைராஜன் என்பவரது வீட்டில் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

அப்போது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த விநாயகா், நின்ற நிலை அம்மன், ஆண் துறவி (இரு சிலைகள்), ஆண் தெய்வம், சிவன் பாா்வதி இணைந்த நிலை துறவி, சிவன், பெண் தெய்வம், ஆடு தோற்றமுடைய, தனி அம்மன் ஆகிய உலோகத்தினால் ஆன 10 சுவாமி சிலைகளை மீட்டனா். இந்தச் சிலைகள் சுமாா் 400 ஆண்டுகள் பழைமையானது என்றும், இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் எனவும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் தெரிவித்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட 10 சிலைகளில் ஒரு சிலையான விநாயகா் உலோக சிலை நாட்டாா் மங்களம் கோயிலில் இருந்து திருடப்பட்டது தெரியவந்துள்ளது. தற்போது மீட்கப்பட்டுள்ள அனைத்து சிலைகளும் பிரபல சிலை கடத்தல் மன்னன் தீன தயாளனின் சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள அபா்ணா ஆா்ட் கேலரியிலிருந்து 2008 முதல் 2015 வரை வாங்கப்பட்டதாக ஷோபா துரைராஜன் தங்களிடம் கூறியதாக போலீஸாா் தெரிவித்தனா். அதன் உண்மை தன்மை குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே, இங்கிருந்து பழைமையான 7 சிலைகள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMilgFodHRwczovL3d3dy5kaW5hbWFuaS5jb20vYWxsLWVkaXRpb25zL2VkaXRpb24tY2hlbm5haS9jaGVubmFpLzIwMjMvamFuLzI2L2lkb2wtd2luZy1zZWl6ZXMtMTAtbW9yZS00MDAteWVhci1vbGQtaWRvbHMtZnJvbS1yYS1wdXJhbS1ob3VzZS0zOTkwMjM5Lmh0bWzSAZMBaHR0cHM6Ly9tLmRpbmFtYW5pLmNvbS9hbGwtZWRpdGlvbnMvZWRpdGlvbi1jaGVubmFpL2NoZW5uYWkvMjAyMy9qYW4vMjYvaWRvbC13aW5nLXNlaXplcy0xMC1tb3JlLTQwMC15ZWFyLW9sZC1pZG9scy1mcm9tLXJhLXB1cmFtLWhvdXNlLTM5OTAyMzkuYW1w?oc=5