கபசுர குடிநீர் வழங்குவதில் அரசே முடிவு எடுக்கலாம் : சென்னை ஐகோர்ட் – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள அனைவருக்கும் கபசுர கசாயம் வழங்க அரசுக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

[embedded content]
கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க பொதுமக்களுக்கு கபசுர கசாயம் வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னையை சேர்ந்த ஜோசப் என்பவர் தாக்கல் செய்த மனு இன்று வீடியோ கால் மூலமாக நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு விசாரித்தது.

தமிழகத்தில் கொரோனா ‘சமூகப் பரவல்’ இல்லை – ஆறுதல் அளித்த பீலா ராஜேஷ் பிரஸ் மீட்

அப்போது, கொரோனா நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்க ‘கபசுர கசாயம்’ குடிக்க வேண்டும் என சித்த மருத்துவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இந்நோய்க்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மட்டுமல்லாமல் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாக பொதுமக்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என மனுதாரர் வாதிட்டார்.

மேலும், கபசுர கசாயத்தின் பலன் குறித்து தற்போது பெரும்பாலானோருக்கு தெரிய வந்துள்ளதால், இந்த கசாயம் விற்பனை செய்யப்படும் நாட்டு மருந்து கடைகளை 24 மணி நேரமும் திறந்து இருக்க அனுமதிக்க வேண்டும் எனவும், இந்த கசாயத்தை தயாரிக்க தேவைப்படும் 15 மூலிகைகளை கொண்டு செல்லும் வாகனங்களை காவல்துறையினர் தடுக்க கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.

”தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில்”… தினமும் 150 பாக்கெட் ரொட்டியை தயாரித்து வழங்கும் பேக்கரி!

மனுதாரரின் வாதத்தை கேட்ட நீதிபதிகள், கொரோனாவை குணப்படுத்துவதற்கான மருந்தை ஆய்வு செய்ய சித்த மருத்துவர் கொண்ட நிபுணர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு குறிப்பிட்ட மருந்தை வழங்க வேண்டும் என தங்களால் உத்தரவிட முடியாது என தெரிவித்தனர்.

மேலும், மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக அரசே முடிவெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/kabasura-kashayam-tamil-nadu-government-madras-high-court-covid-19-181701/