`தனிமைப்படுத்தப்பட்ட வார்டாக மாறும் விடுதிகள்!’ -மாநகராட்சிக் கட்டுப்பாட்டில் ஐஐடி மெட்ராஸ் – Vikatan

சென்னைச் செய்திகள்

அடையாரில் உள்ள சென்னை ஐஐடி வளாகம் சுமார் 620 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு 20 மாணவர் விடுதிகள் உள்ளன. அதில் ஐந்து விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்டவர்களைக் கண்காணிக்க சென்னை மாநகராட்சியால் பயன்படுத்தப்படவுள்ளன. மாணவர்கள் மட்டுமல்லாமல் அங்கு பணிபுரியும் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களும் ஐஐடி வளாகத்தில் தங்கியிருப்பதால், குடியிருப்புப் பகுதிகளிலிருந்து தொலைவில் உள்ள விடுதிகளே கண்காணிப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. ஐஐடிக்கு அடையாறு, வேளச்சேரி மற்றும் தரமணி என்று மூன்று நுழைவாயில்கள் உள்ளன . தனிமைப்படுத்தப்பட்ட வார்டுக்காக, மக்கள் நடமாட்டம் அதிகமில்லாத தரமணி நுழைவாயில் அருகிலுள்ள விடுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கொரோனா சிறப்பு வார்டு
representational image

கல்லூரி வளாகத்தில் தற்போது எவரும் தனிமைப்படுத்தப்படவில்லை. கண்காணிக்கப்பட வேண்டியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, போதிய இடமில்லாத பட்சத்திலேயே மாணவர்கள் விடுதி பயன்படுத்தப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்த நாளே, அங்கு தங்கி படித்துவரும் வெளிநாட்டு மாணவர்களைத் தவிர மற்ற உள்நாட்டு மாணவர்கள் விடுதிகளை காலி செய்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாணவர்களின் கல்வியில் எவ்வித இடையூறுகளும் ஏற்படாமலிருக்க ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Source: https://www.vikatan.com/news/tamilnadu/iit-madras-in-municipal-control-for-isolation-ward-process