சாதி சான்றிதல் விவகாரம் – ஆர்.டி.ஓ.வுக்கு அபராதம் – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
மாதிரிப் படம்.

  • Share this:
தர்மபுரி மாவட்டம் சின்ன காணஹல்லி கிராமத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி, தனது குழந்தைகளுக்கு பழங்குடியினர் பிரிவு சான்றிதழ் கோரி தர்மபுரி வருவாய் கோட்டாட்சியரிடம் கொடுத்த விண்ணபம் நிராகரிக்கப்பட்டது.

பின்னர், மாநில அளவிலான பரிசீலனை குழுவுக்கு அவர் விண்ணப்பித்திருந்தார். அந்தக் குழு அவர்களை, பழங்குடியினர் என உறுதி செய்து ஜெயலட்சுமியின் குழந்தைகளுக்கு, சான்றிதழை வழங்க உத்தரவிட்டிருந்தது.

ஆனால் பழங்குடியினர் சான்றிதழ் அவருக்கு வழங்கப்படாததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலட்சுமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினித் கோத்தாரி ஆர் சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜெயலட்சுமிக்கு சாதி சான்றிதழ் வழங்குவது தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், மாநில குழு பரிந்துரைத்த பிறகு கூட சாதி சான்றிதழ் வழங்காதது ஏன் என கேள்வி எழுப்பினர். இது போன்ற அதிகாரிகளால் தான் அரசின் நற்பெயர் கெடுகிறது என தெரிவித்த நீதிபதிகள், இதுபோன்ற அதிகாரிகளை அரசு காப்பாற்ற நினைக்கக்கூடாது எனவும் தெரிவித்தனர்.

மேலும், சாதி சான்றிதழ் வழங்காத ஆர்.டி.ஓ தேன்மொழிக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அதை கொரோனா நிவாரண நிதிக்கு செலுத்துமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வருகிற திங்கட்கிழமை சாதி சான்றிதழோடு சம்பந்தபட்ட ஆர்டிஓ வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.




First published: June 12, 2020

Source: https://tamil.news18.com/news/tamil-nadu/madras-hc-slammed-rdo-in-caste-certificate-issue-san-303651.html