சென்னை டூ மெட்ராஸ்… – தினமணி

சென்னைச் செய்திகள்

கரோனா பொதுமுடக்கத்தை பலரும் பலவிதமாக கடந்திருந்தாலும், “பிளேபாய்’ புகழ் புகைப்பட கலைஞர் எல்.ராமசந்திரன் தனது எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பாக பயன்படுத்தியிருக்கிறார். ஆம், பொதுமுடக்க நாள்களில் சென்னையின் புராதன சின்னங்கள் முதல் தற்போது உள்ள முக்கிய கட்டடங்கள் வரை பதிவு செய்யும் நாள்களாகப் பயணித்திருக்கிறார். அதன்முடிவு, கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி அனுசரிக்கப்பட்ட 381 -ஆவது சென்னைதினத்தன்று, “சென்னை டூ மெட்ராஸ்’ என்ற இரண்டு பாகங்களைக் கொண்ட புகைப்பட ஆல்பத்தை வெளியிட்டிருக்கிறார். இது குறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

“”பொதுமுடக்க நேரத்தில் எனது ஊடக நண்பர் ஒருவர் போட்டோகிராபி கற்றுத் தரும்படி கேட்டார். சரி எனக்கும் பொழுதுபோகுமே என்று அவருடன் ஒருநாள் வெளியே சென்றேன். அப்படி வெளியே போகும்போது வனாந்திரமாக காட்சியளித்த தெருக்களில் ஆள் நடமாட்டம் இல்லாமல் அமைதியாக இருந்தது. என்னுடைய வாழ்நாளில் சென்னையை இதுவரை நான் இப்படி பார்த்ததே இல்லை. எந்நேரமும், இரைச்சலுடன் கூடிய, சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையம் மக்கள் கூட்டம் எதுவுமின்றி அவ்வளவு நிசப்தமாக இருந்தது. பொதுவான சமயத்தில் அந்த இடத்தை எப்போது கடந்துபோவோம் என்றுதான் தோன்றும். ஆனால், அன்று அந்த இடத்தைவிட்டு அகலவே மனம் இல்லை. இன்னும் கொஞ்சம் நேரம் இங்கிருக்கலாமே என்று தோன்றியது. நான் சுமார் 40 நாடுகளுக்கு மேல் பயணம் செய்திருக்கிறேன். அங்குள்ள தெருக்களையும், கட்டடங்களையும் காணும்போது ஏற்பட்ட உணர்வு அன்று சென்னையில் ஏற்பட்டது.

அதன்தாக்கம், இந்த சந்தர்ப்பத்தைத் தொலைத்துவிடக் கூடாது என்று தோன்றியது. இதனால், ஸ்டிரீட் போட்டோகிராபி செய்யலாம் என்ற எண்ணம் வந்தது. எனவே, காவல்துறை கமிஷனரை சந்தித்து, நானும் நண்பரும் மட்டும் செல்வதற்கான முறையான அனுமதியைப் பெற்று கிளம்பினோம்.

சென்ட்ரல் கட்டடம் போன்று சென்னையில் உள்ள அத்தனை புராதன கட்டடங்களையும் பதிவு செய்ய நினைத்தோம். முதலில் 10 கட்டடங்களை தேர்ந்தெடுத்தோம். ஆனால், ஆய்வு செய்தபோதுதான் புரிந்தது, நாம் பதிவு செய்ய வேண்டிய கட்டடங்கள் நிறைய இருக்கின்றன என்று.

இப்படி மார்ச் மாத இறுதியில் தொடங்கிய எங்கள் தேடலில் தற்போது பதிவு செய்திருப்பது 220 கட்டடங்கள்தான். இன்னும் 40 கட்டடங்கள் பதிவு செய்ய வேண்டியுள்ளது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், நமது புராதன கட்டடங்களில் பலவும் இந்தியாவில், உலகில் முதலிலும், இரண்டாவது இடத்திலும் இருக்கிறது என்பது.
உதாரணமாக, நமது சென்னை எக்மோரில் உள்ள கண் மருத்துவமனை உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதுபோன்று அப்போதைய கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி (அண்ணா பல்கலைக்கழகம்) அதன் சிறப்பு, ஐரோப்பிய ஆர்க்கிடெக்சரில், கட்டப்பட்ட இரண்டாவது பொறியியல் கல்லூரி.

ஆசியாவில் முதன்முதலில் கட்டப்பட்ட வனவிலங்கு உயிரியல் பூங்கா, சென்னையில் உள்ள வண்டலூர் பூங்கா. இந்தியாவின் இரண்டாவது மகளிர் கல்லூரி ராணிமேரி கல்லூரி. சென்னையின் முதல் பூங்கா, தி.நகரில் உள்ள பனகல் பூங்கா. இப்படி பலவற்றை சொல்லிக்கொண்டே போகலாம்.

அதாவது 1637- இல் பிரான்ஸிஸ்டே என்பவர் சென்னையை வாங்குகிறார், அவர்கள்தான் கிழக்கியந்திய கம்பெனிக்காரர்கள். அப்போதே சென்னைக்கு மதராஸப்பட்டணம் அல்லது சென்னைப்பட்டணம் என பெயர் வைக்க தீர்மானித்தனர். எனவே, சென்னை என்ற பெயர் அப்போதே இருந்திருக்கிறது.
நமது ஐகோர்ட் இருக்கும் இடம் ஒரு செட்டியாருக்கு சொந்தமானது. அவரிடம் இருந்து லீஸூக்கு எடுத்துதான் பிரிட்டிஷ்காரர்கள் கட்டடம் கட்டியிருக்கிறார்கள்.

அது போன்று மயிலாப்பூரில் உள்ள லஸ் சர்ச் 1516-இல் கட்டப்பட்ட சர்ச். ராயபுரம் ரயில் நிலையம், அதுதான் பழைமையான இரண்டாவது ரயில் நிலையம்.

இன்னொரு ஆச்சரியம், பக்கிங்கம் கேனல் என்று சொல்லப்படும் ஆற்றில், ஆற்று வெள்ளத்தை கட்டுப்படுத்த அந்த காலத்தில், ஸ்டாப்பர், கேட், அங்கே படகுகள் வந்து நிறுத்தப்பட்ட கூடாரம் இதெல்லாம் இன்னும் இருக்கிறது. டச்சு க்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள் வந்து சென்றதற்கான அடையாளமாக அவர்களது கல்லறைகள் இன்னும் இருக்கின்றன.

இதுபோன்று என்னால் முடிந்தளவு ஒவ்வொரு இடத்தையும் தேடித்தேடி பதிவு செய்திருக்கிறேன். அதேசமயம், இன்னும் இடங்களின் பட்டியல் நீண்டுக் கொண்டே இருக்கின்றன.

இப்படி விளையாட்டாக தொடங்கி கடந்த 5 மாதங்களுக்குள் நாங்கள் எடுத்தப்படங்கள் 220-க்கும் மேல் தாண்டிவிட்டன. அப்போதுதான் தோன்றியது, இத்தனை அரிதான படங்கள் எல்லாம் சென்னையை திரும்பி பார்க்க வைக்கும் தகவல் பெட்டகமாக இருக்கும். இதை நாம் மட்டும் ரசிக்காமல், மக்களும் ரசிக்கும்படி ஓர் ஆல்பமாக தயாரித்து வெளியிடலாம் என்று. எனவே சுமார் 400-க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகத்தை, இரண்டு பாகங்களாக தயாரித்து, கடந்த 21- ஆம் தேதி அனுசரிக்கப்பட்ட 381-ஆவது சென்னை தினத்தன்று வெளியிட்டிருக்கிறோம்” என்றார்.

Source: https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2020/aug/23/chennai-to-madras–3453599.html