சென்னை விமான நிலையம் எதிரே டிப்பர் லாரி மோதி என்ஜினீயர் பலி – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை விமான நிலையம் எதிரே டிப்பர் லாரி மோதிய விபத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் லூக்காஸ். இவருடைய மகன் கில்பர்ட் குமார்(வயது 28). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், அம்பத்தூரில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இவர், ஆலந்தூரில் உள்ள நண்பர்களை பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரே ஜி.எஸ்.டி. சாலையில் வந்தபோது மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி இவர் மீது மோதியது.

இதில் கில்பர்ட் குமாரின் முகம், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

பின்னர் சம்பவம் தொடர்பாக டிப்பர் லாரி டிரைவரான திரிசூலம் மங்கள விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த விஜயகுமார்(29) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் வசிப்பவர் அருண்(23). இவரது நண்பர் பிரகாஷ்(22). இவர்களது சொந்த ஊர் திருவண்ணாமலை ஆகும். கட்டுமான தொழிலாளர்களான இவர்கள், குரோம்பேட்டையில் இருந்து பள்ளிக்கரணைக்கு வேலைக்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

பள்ளிக்கரணை வேளச்சேரி மெயின் ரோட்டில் வந்தபோது பின்னால் வேகமாக வந்த தண்ணீர் லாரி இவர்கள் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பிரகாஷ், லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அருண், லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதுபற்றி பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்குப்பதிவு செய்து தண்ணீர் லாரி டிரைவரான பீகாரை சேர்ந்த பீன்டூகுமார் (33) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Source: https://www.dailythanthi.com/News/Districts/2020/09/20055924/Opposite-Chennai-Airport-Tipper-truck-collision-Engineer.vpf