3 மணி நேர எச்சரிக்கையால் பரபரத்த சென்னை.. அடுத்த 24 மணி நேரமும் முக்கியம்.. கன மழை பெய்யுமாம் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் இரவு முதல் கனமழை பெய்து வரும் நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு மழை தொடரும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வானிலை ஆய்வு மையம் இன்று காலை எச்சரிக்கை விடுத்தது. இதன்பிறகு தமிழகத்தில் 2 நாட்களுக்கு கன மழை இருக்கும் என்று மஞ்சள் அலர்ட்டும் பிறப்பிக்கப்பட்டது.

image

சென்னையில் நல்ல மழை.. வெள்ளக்காடான சாலைகள் – வீடியோ

சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் மூன்று வருடங்களில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் மிகப்பெரிய கனமழை பெய்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி மைலாப்பூர் டிஜிபி ஆபீஸ் பகுதியில் அதிகபட்சமாக 19 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

imageமெரினா பீச்சில் தண்ணீரை பாருங்கள்.. எந்த நகரமாக இருந்தாலும் தாங்க முடியாது.. தமிழ்நாடு வெதர்மேன்

சென்னை மழை

செங்குன்றம் பகுதியில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னை அண்ணா பல்கலை பகுதியில் 14 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. நுங்கம்பாக்கம் 5.5 செ.மீ, மீனம்பாக்கம் 4 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. சோழாவரம் பகுதியில் 5.5 செ.மீ மழையும் பெய்துள்ளது.

மெரினாவில் தண்ணீர்

மெரினா கடற்கரையில் 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக வெள்ள நீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில்தான் இன்று காலை சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை பிறப்பித்தது. அதில், அடுத்த இரண்டு முதல் மூன்று மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மக்கள் வெளியே செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

3 மணி நேர எச்சரிக்கை

விடிய விடிய பெய்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் எளிதாக வாகனங்களை இயக்க முடியவில்லை. இந்த நிலையில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்ற எச்சரிக்கை காரணமாக, மக்கள் வீடுகளுக்குள்ளேயே கம்பளியைப் போர்த்திக் கொண்டு முடங்கி கிடந்தனர்.

9 மாவட்டங்கள்

இதனிடையே இன்று மதியம் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் – பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-meteorological-department-says-heavy-rain-will-be-in-the-city-401654.html