மோடி சென்னை பயணம்.. நடிகை ஓவியா பகீர் ட்வீட்.. பாஜகவினர் ஷாக்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: பிரதமர் மோடி நாளை சென்னை மற்றும் கேரளாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில், நடிகை ஓவியா அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை (பிப்.14) சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து விமானப்படை விமானம் மூலம் காலை 10.35 மணிக்கு சென்னை வரும் பிரதமரை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வரவேற்கின்றனர்.

பின்னர் ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து காரில் விழா நடக்கும் நேரு உள்விளையாட்டு அரங்குக்கு செல்கிறார். அங்கு, ராணுவத்துக்காக தயாரிக்கப்பட்ட அர்ஜூன் ரக பீரங்கியை ராணுவத்திடம் ஒப்படைக்கிறார். இந்த நிகழ்வு 11.15 மணி முதல் 12.15 மணி வரை நடைபெறுகிறது. பின், விரிவுபடுத்தப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கி வைக்கிறார்.

மோடிக்கு ஓவியா எதிர்ப்பு

இந்நிலையில், நடிகை ஓவியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் #GoBackModi என்று ட்வீட் செய்துள்ளார். பிக்பாஸ் சீசன் 1 மூலம் பலதரப்பட்ட ரசிகர்களை சம்பாதித்தவர் ஓவியா. இவருக்கென்று பல ஆர்மி கூட உள்ளது. தனது வெளிப்படையான நேர்மையான குணத்துக்காக ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் ஓவியா.

பலருக்கு மகிழ்ச்சி

தற்போது அவரது இந்த ஓபன் ட்வீட் பலருக்கு அதிர்ச்சியையும், பலருக்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களோ, ‘எங்க தலைவிக்கு தில்ல பார்த்தியா’ என்று ட்வீட் செய்து வருகின்றனர்.

தகதகக்கும் ட்வீட்

ஒரு சில ரசிகர்களோ, ஓவியாவுக்கு இருக்கும் தைரியம் கூட விஜய், அஜித் போன்றவர்களுக்கு இல்லை என்று டீவீட்டிவிட, அனல் அடித்துக் கொண்டிருக்கிறது ஓவியாவின் ட்விட்டர் அக்கவுண்ட்.

அதற்கு தான் எதிர்ப்பா?

அதேசமயம், பிரதமர் மோடி நாளை பிற்பகலில் கேரளாவுக்கும் செல்கிறார். இதனால், ஓவியா சென்னை வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ட்வீட் செய்துள்ளாரா அல்லது தன் சொந்த மாநிலமான கேரளா வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ட்வீட் செய்துள்ளாரா என்பது தெரியவில்லை.

Source: https://tamil.oneindia.com/news/chennai/actress-oviya-tweet-opposing-modi-visit-chennai-and-kerala-411909.html