மெட்ராஸ் வரலாறு: எம்.ஜி.ஆர் வளர்த்த சிங்கம் குறித்துத் தெரியுமா? – பகுதி 4 – விகடன்

சென்னைச் செய்திகள்

`ராஜா’ என்றால் திரும்பிப் பார்க்கும். மக்கள் அடிக்கடி அந்தப் பெயரைச் சொல்லி அழைத்து அதை மிகுந்த வெறுப்படையச் செய்த காலகட்டத்தில் அது திரும்பிப் பார்ப்பதை நிறுத்திவிட்டது. சிலர் எம்.ஜி.ஆர் குரலில் அழைத்து கவர்வதற்கு முயற்சி செய்வார்கள். ‘அடிமைப்பெண்’ படத்தில் எம்.ஜி.ஆர். கட்டி உருளும் சிங்கத்தைப் பார்த்திருப்பீர்கள். அந்தச் சிங்கம்தான் அது. எம்.ஜி.ஆரின் வீட்டில் அவருடைய அரவணைப்பில் வளர்க்கப்பட்ட சிங்கம், தன் கடைசி காலத்தில் இப்படி நிராதரவாக விடப்பட்டது எனக்குள் மிக வேதனையான சித்திரமாகப் படிந்துவிட்டது. 80-களில் ஒருநாள் எம்.ஜி.ஆர் அதை ஜூவுக்கு வந்து பார்த்துவிட்டுப் போனார். அதன் பிறகு எம்.ஜி.ஆர் வளர்த்த சிங்கம் மறைந்தது என்று செய்தியாகப் பார்த்தேன். எம்.ஜி.ஆர் மீது இருந்த ஏக்கத்தினாலேயே அது இறந்துவிட்டதாக அப்போது பேசிக்கொண்டார்கள். அதன் பாடம் செய்யப்பட்ட உருவம் இப்போது எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் உள்ளது (படம்).

அந்த ஜூவை இப்போது பார்க்க வேண்டுமானால் ஒரே ஒரு வழி இருக்கிறது. எஸ்.எஸ்.ஆர்- விஜயகுமாரி நடித்த ‘காக்கும் கரங்கள்’ படத்தைப் பாருங்கள். அதில் இடம்பெறும் `அல்லித்தண்டு காலெடுத்து அடிமேல் அடி எடுத்து’ பாடல் முழுக்க முழுக்க அங்கு படமாக்கப்பட்டதுதான். `சிறியவர்களுக்கு 15 காசு’, `பெரியவர்களு 25 காசு’ என்று போர்டு போட்டிருக்கும். பல ஜூக்களிலும் நுழைந்ததும் முதலில் மனிதக் குரங்கைத்தான் வைத்திருக்கிறார்கள். நான் பார்த்த பெங்களூரு, திருவனந்தபுரம், மைசூர், சென்னையின் ஜூக்களில் இவைதான் முதன்மை வகிக்கின்றன.

ரயில் நிலையம் விஸ்தரிப்பு வேண்டி இந்த உயிர் காலேஜ் வண்டலூருக்கு மாற்றப்பட்டது. புறநகர் ரயில் நிலையம் அமைக்கப்பட்டபோது இந்த மிருகக்காட்சிசாலையும் மூர் மார்க்கெட்டும் சென்னையின் அடையாளத்திலிருந்து ஓய்வு பெற்றன. ராட்ச இரும்பு வாகனங்கள் இந்த இரண்டின் சமாதியின் மீதுதான் இப்போது தடதடக்கின்றன. ரயில் நிலையத்தின் தேவைக்காக இவை இரண்டும் இடிக்கப்பட்டன.

மூர்மார்க்கெட்… அங்கே விற்காத பொருள் இல்லை… அம்மா, அப்பாவைத் தவிர எல்லாவற்றையும் அங்கே வாங்கலாம் என்று சொல்வார்கள். குரங்கு, பச்சைக்கிளி, ஸ்கௌட் டிரெஸ், வண்ண மீன்கள், அரிய பழைய புத்தகங்கள், நான்கு பேண்டு ரேடியோ, பூதக் கண்ணாடி, ரெக்கார்டு பிளேயர் எல்லாமே அங்கு விற்கும். மேலே சொன்னதில் குரங்கு, நான்கு பேண்டு ரேடியோ தவிர மற்றவை எல்லாவற்றையும் நான் வாங்கியிருக்கிறேன்.

சிலர் கூவி விற்பார்கள்…

வட இந்தியாவிலிருந்து வந்து கடைவிரிப்பார் இருந்தனர். அவர்களின் விற்பனை வினோதமானது. அது…

தொடரும்…

பகுதி 3-க்கு செல்ல…

Source: https://www.vikatan.com/best-of-vikatan/vikatan-vintage/history-of-madras-about-mgr-foster-lion