சென்னையில் வீடு தேடி வரும் காய்கனிகள்.. தகவல்களை அறிய தொலைபேசி எண் அறிவிப்பு! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் நாளை வீடு தேடி காய்கறிகள் வர உள்ள நிலையில், இது தொடர்பான விவரங்களை அறிய தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த நாளை முதல் 31-ம் தேதி வரை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. மருந்து கடைகள், பால் பூத்கள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்படும். மளிகை, காய்கறி கடைகள் திறக்க அனுமதி இல்லை.

காய்கறிகள் மற்றும் பழங்கள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி இடங்களில் வாகனங்கள் மூலம் வீடுகளுக்கு கொண்டு வந்து விநியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில் சென்னையில் நாளை முதல் 200 வார்டுகளில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்படும் என்று சென்னை மாநகர ஆணையர் சுகன்தீப் சிங் பேட்டி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாளை முதல் பெரு நகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் காய்கறி மற்றும் பழங்களை நடமாடும் வாகனம் மூலம் விற்பனை செய்ய வணிகர் சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வணிகர் சங்கம் சார்பில் 2000 வண்டிகள், தோட்டக்கலையின் சார்பில் 600 வண்டிகள், கூட்டுறவு சங்கங்களின் சார்பில் 35 வண்டிகளில் காய்கனிகள் விற்பனை செய்யப்பட்ட உள்ளன.

அனைத்து வார்டுகளிலும் மூன்று சக்கர வாகனம் மற்றும் தள்ளுவண்டிகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதி பெற்று வணிகர்கள் விற்பனை செய்ய வேண்டும். நடமாடும் வாகனங்கள் மூலம் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே காய்கனி விற்பனை செய்யப்படும். பொதுமக்கள் நடமாடும் காய்கனி அங்காடி குறித்த வருகை மற்றும் விலை போன்ற தகவல்களை 94999 32899 என்ற தொலைபேசி எண்ணிலும், 044-4568 0200 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

English summary
As vegetables are expected to arrive in search of a house in Chennai tomorrow, a telephone number has been announced for details

Source: https://tamil.oneindia.com/news/chennai/the-chennai-corporation-has-informed-vegetables-will-be-distributed-to-homes-in-chennai-from-tomorro-421820.html