ஹோட்டல்களில் 50% பேருக்கு மேல்.. அனுமதித்தால் தொழில் உரிமம் ரத்து..சென்னை மாநகராட்சி அதிரடி – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், சென்னை உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மேல் உணவருந்த அனுமதித்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 65 நாட்களுக்கு மேலாகக் குறைந்த வந்த கொரோனா பாதிப்பு, கடந்த மூன்று நாட்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இன்று சென்னை, கோவை உட்பட மொத்தம் 23 மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு அதிகிரகரித்துள்ளது. இது கொரோனா 3ஆம் அலைக்கான தொடக்கமாக இருக்குமோ என்றும் அஞ்சப்படுகிறது.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வரும் சூப்பர் வசதி.. டெஸ்ட் எடுத்த 13 நிமிடங்களில் கொரோனா ரிசல்ட்சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வரும் சூப்பர் வசதி.. டெஸ்ட் எடுத்த 13 நிமிடங்களில் கொரோனா ரிசல்ட்

தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கைக் கூடுதல் தளர்வுகளின்றி வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள 9 பகுதிகளில் வணிக வளாகங்கள் செயல்படத் தடை விதிக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தச் சூழலில், 50% அதிகமான நபர்களை அனுமதிக்கும் உணவகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் எனச் சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

சென்னை மாநகராட்சி

இது தொடர்பாகச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவிட் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை 6.00 மணி வரை கூடுதலாக எவ்வித தளர்வுகளும் இன்றி நீடிக்கப்படுவதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொரோனா வழிகாட்டுதல்கள்

பொதுமக்கள் தங்களுடைய தேவைகளுக்காக வணிக வளாகங்கள், அங்காடிகள் உட்பட பல்வேறு பொது இடங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், அவ்வப்பொழுது கைகளைச் சோப்பு கரைசல் மற்றும் சானிடைசர் கொண்டு சுத்தப்படுத்திக் கொள்ளுதல் போன்ற அரசின் பாதுகாப்பு வழிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள்

தற்பொழுது அண்டை மாநிலங்களிலும் மாநிலத்தின் சில பகுதிகளிலும், நோய்த் தொற்று சற்று அதிகரித்து வரும் நிலையில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் சரியான முறையில் பின்பற்றப்பட வேண்டியது அவசியமாகிறது. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்குள் பங்கேற்பதை உறுதி செய்யும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், கல்யாண மண்டபங்கள், சமூக நலக்கூடங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு இணையதளத்தின் வாயிலாகத் தெரியப்படுத்த உரிமையாளர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உரிமம் ரத்து

மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திருமணம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்குப் பதிவு செய்யப்பட்ட 2608 மண்டபங்கள் மற்றும் ஹோட்டல்களில் மாநகராட்சி வருவாய்த்துறை அலுவலர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 57 இடங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டு இதுவரை ரூ.2,21,600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு அறிவித்துள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் உணவருந்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த அரசின் வழிகாட்டு நெறிமுறையைப் பின்பற்றாமல் 50 சதவீதத்திற்கும் மேல் உணவருந்த அனுமதிக்கும் ஓட்டல் மற்றும் உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு அவர்களுக்கான தொழில் உரிமம் ரத்து செய்யப்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
Chennai corporation warns hotel license will be canceled if Corona rules aren’t followed. After 68 days, for the past three days, Corona case continues to raise in-state.

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-corporation-warns-that-license-will-be-canceled-if-50-occupancy-is-not-followed-428649.html