இடம், பொருள், ஆவல்: மெட்ராஸில் ஆங்கிலேயர்கள் வடிவமைத்த முதல் தெரு எஸ்பிளனேடு! – Vikatan

சென்னைச் செய்திகள்

டேர் மாளிகையின் வரிசையில் சற்றுத் தள்ளி அமைந்திருக்கிறது, ஆண்டர்சன் தேவாலயம். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பாதிரியாரான ஆண்டர்சன், சென்னை எழும்பூரில் தொடங்கிய ‘ஜெனரல் அஸம்ப்ளி பள்ளி’, 1838-ல் எஸ்பிளனேடுக்கு இடமாறியது. இந்தியாவின் பழமையான கல்வி நிறுவனங்களில் ஒன்றாக இன்று விளங்கும், சென்னைக் கிறித்தவக் கல்லூரி ஆரம்பத்தில் இந்தப் பள்ளியில்தான் தொடங்கப்பட்டது. 1937-ல் இந்தக் கல்லூரி தாம்பரத்துக்கு இடமாறும்வரை காலேஜ் சேப்பல் என்று அழைக்கப்பட்ட இந்த தேவாலயம், பிறகு ஆண்டர்சன் தேவாலயம் ஆனது.

இதற்கு சற்று தள்ளி அமைந்திருக்கிறது அரண்மனைக்காரன் தெரு எனப்படும் ஆர்மீனியன் தெரு. மெட்ராஸின் ஆரம்பகால வணிகர்களான ஆர்மீனியர்களின் வழிபாட்டுக்காக இங்கு 1712-ல் ஒரு தேவாலயம் கட்டப்பட்டது. இங்கு வாரம் ஒருமுறை ஒலிக்கும் தேவாலய மணி வரலாற்றை எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

ஆர்மீனியன் தேவாலயம்

கறுப்பர் நகரத்தை இடித்து உருவாக்கிய காலியிடம் அடுத்த நூறு ஆண்டுகள் காலியாகவே கிடந்தது. எஸ்பிளனேடு பூங்கா என்று அழைக்கப்பட்ட அந்த இடத்தில், உயர் நீதிமன்றத்துக்கு தனி கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்கு முன்பு உயர் நீதிமன்றம் கடற்கரைக்கு எதிரிலிருந்த சுங்கக் கட்டடத்தில் செயல்பட்டுவந்தது. இந்தோ-சராசனிக் பாணியில் அமைந்த, மெட்ராஸ் உயர் நீதிமன்றம் அந்தக் கால மதிப்பீட்டில் ரூ. 13 லட்சம் செலவில், 1892-ல் கட்டி முடிக்கப்பட்டது.

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் முதல் உலகப் போரில் குண்டு வீச்சுக்கு உள்ளான வரலாற்றைப் பலர் அறிந்திருக்கமாட்டார்கள். 1914, செப்டம்பர் 22ம் தேதி ஜெர்மன் போர்க் கப்பல் எஸ்.எம்.எஸ்.எம்டன் வீசிய குண்டு, உயர் நீதிமன்ற வளாகத்தைச் சேதப்படுத்தியதை அறிவிக்கும் தகவல் பலகை, இப்போதும் உயர்நீதிமன்ற வளாகச் சுவற்றில் பதிக்கப்பட்டிருக்கிறது.

Source: https://www.vikatan.com/government-and-politics/literature/the-history-of-the-evolution-of-esplanade-in-chennai