சென்னை ஐஐடியில் நீடிக்கும் மர்மம்! மான்களை தொடர்ந்து குரங்கும் பலி… பரவுகிறதா ஆந்திராக்ஸ்? – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: ஐஐடி தொழில்நுட்ப வளாகத்தில் கடந்த வாரம் மட்டும் 4 மான்கள் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், குரங்கு ஒன்று சமீபத்தில் உயிரிழந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை அடையாறில் பரந்து விரிந்த வனப்பகுதியை கொண்டுள்ள ஐஐடி வளாகத்தில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன.

இந்த நிலையில், கடந்த 17 ஆம் தேதி மான் ஒன்று மர்மமான முறையில் இறந்துகிடந்தது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து 4 மான்கள் உயிரிழந்தன.

சென்னை ஐஐடி வளாகத்தில் ஆந்தராக்ஸ் நோயால் மான் உயிரிழப்புசென்னை ஐஐடி வளாகத்தில் ஆந்தராக்ஸ் நோயால் மான் உயிரிழப்பு

பலத்த பாதுகாப்புடன் உடல்கள் அடக்கம்

இந்த மான்கள் அனைத்தும் ஆந்திராக்ஸ் நோய் காரணமாக உயிரிழந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. உயிரிழந்த மான்களை பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் என தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் நிறுவனம் வனத்துறைக்கு அறிவுறுத்தியது. 6 முதல் 8 அடி ஆழத்திற்கு குழி தோண்டி மான்களின் உடல்களை அடக்கம் செய்யவும் அந்த நிறுவனம் அறிவுறுத்தியது.

ஆந்திராக்ஸ் காரணமா?

இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், கடந்த 17 ஆம் தேதி ஒரு மானுக்கு மட்டும் ஆந்திராக்ஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறினர். மற்ற 3 மான்களுக்கு ஆந்திராக்ஸ் தொற்று இல்லை என்பது மெட்ராஸ் கால்நடை மருத்துவக்கல்லூரி நடத்திய பரிசோதனையில் தெரியவந்து இருக்கிறது.

மான் வயிற்றில் 7 கிலோ பிளாஸ்டிக்

உயிரிழந்த மான்களில் ஒரு மானுக்கு மட்டும் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதில், ஆந்திராக்ஸ் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் அதன் வயிற்றிலிருந்து 7 கிலோ எடைகொண்ட பிளாஸ்டிக் கழிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. சென்னை ஐஐடியில் மட்டும் கடந்த ஆண்டு 77 விலங்குகள் உயிரிழந்து இருப்பதாகவும் இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரியில் 18 விலங்குகள் உயிரிழந்து இருப்பதாகவும் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு வனத்துறை பதில் அளித்துள்ளது.

சென்னை ஐஐடியில் தொடரும் மர்மம்

சென்னை ஐஐடி அதிகளவில் வனவிலங்குகள் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்துமாறு முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சென்னை வனவிலங்கு காப்பாளரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பாக மான்கள் மற்றும் கரும்புலிகள் மரணத்துக்கான காரணத்தை தெரிவிக்குமாறு அவர் கோரியுள்ளார். அடுத்தடுத்து ஐஐடி வளாகத்தில் விலங்குகள் உயிரிழப்பதற்கான காரணம் அறியாமல் குழம்பிப்போய் நிற்கிறது தமிழ்நாடு வனத்துறை.

மனிதர்களுக்கும் பரவுமா?

அண்மையில் உயிரிழந்த குரங்கிடம் எடுக்கப்பட்ட மாதிரிகள் தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் நிறுவன பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. கல்லூரி மற்றும் விடுதி வளாகத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களுடன் குரங்குகள் நெருக்கமாக இருக்கும் என்பதால் குரங்கின் மரணம் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

கேரளாவில் பரவிய நிஃபா வைரஸ் தொடங்கி பல நோய்கள் விலங்குகளின் மூலம் மனிதர்களுக்கு பரவி பேரழிவை ஏற்படுத்தி இருக்கின்றன. இத்தகைய சூழலில் ஐ.ஐ.டி. வளாகத்திற்குள் அடுத்தடுத்து நிகழும் விலங்குகளின் உயிரிழப்புகள் பல்வேறு சந்தேகங்களையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

English summary
The mysterious death of 4 deer at the IIT Technology Campus last week alone has caused a stir.: ஐஐடி தொழில்நுட்ப வளாகத்தில் கடந்த வாரம் மட்டும் 4 மான்கள் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், குரங்கு ஒன்று உயிரிழந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Source: https://tamil.oneindia.com/news/chennai/mystery-continues-in-chennai-iit-after-4-deers-a-monkey-died-is-anthrax-spreading-452767.html