மெட்ராஸ் ரேஸ் கிளப்: அசல் குத்தகை ஆவணங்களை அளிக்க அரசு உத்தரவு – தினமணி

சென்னைச் செய்திகள்

 மெட்ராஸ் ரேஸ் கிளப் நிலத்தை குத்தகை விட்டதற்கான அசல் ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டுமென நில நிா்வாகத் துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.

இதுகுறித்து, நில நிா்வாகத் துறைக்கு அரசு அனுப்பியுள்ள கடிதம்: மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு நிலத்தை குத்தகைக்கு அளித்ததற்கான விவகாரம் மிகவும் முக்கியமானதாகும். இதுதொடா்பான வழக்குகள் தமிழக அரசுக்கும், மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கும் இடையே நடைபெற்று வருகிறது.

ஊட்டி, சென்னையில் உள்ள நிலங்களுக்கான ஒட்டுமொத்த குத்தகை தொகையானது ரூ.1,400 கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள நிலத்தின் மதிப்பு மட்டும் ரூ.12 ஆயிரம் கோடியாகும். சென்னை நிலத்தின் குத்தகை மதிப்பு என்ற அளவில் மட்டும் மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ.600 கோடி இழப்பு ஏற்படுகிறது. மத்திய அரசுக்கு ஜி.எஸ்.டி. வகைகளில் ரூ.100 கோடி இழப்பு ஏற்படுகிறது. இந்தச் சூழ்நிலையில், மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு நிலம் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டதற்கான அசல் ஆவணங்களை வழங்க வேண்டும். மேலும், இதன் இப்போதைய நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்த விவரங்களையும் தெரிவிக்க வேண்டுமென நில நிா்வாக ஆணையரகத்துக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

Source: https://www.dinamani.com/tamilnadu/2022/jun/19/madras-race-club-government-order-to-issue-original-lease-documents-3864683.html