சென்னை ஐ.ஐ.டி.யில் 4 ஆண்டு ஆன்லைன் பட்டப்படிப்பு அறிமுகம் – விண்ணப்பிக்க 19-ந் தேதி கடைசி நாள் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை:

மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று சென்னை ஐ.ஐ.டி. பி.எஸ்சி. புரோகிராமிங் அண்ட் டேட்டா சயின்ஸ் பாடத்தை பி.எஸ். டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் 4 ஆண்டு பட்டப்படிப்பாக தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது. தற்போது 12-ம் வகுப்பு படித்துவரும் மாணவர்களும் விண்ணப்பங்களை அனுப்பி மாணவர் சேர்க்கையை உறுதிசெய்து கொள்ளலாம்.

எந்த பாடப்பிரிவு மாணவரும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு ஏதும் இல்லை. 10-ம் வகுப்பில் ஆங்கிலம், கணிதம் படித்த எந்தவொரு மாணவரும் இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுவதால், பூகோள ரீதியான வரம்பும் கிடையாது.

பெருவாரியான தமிழக மாணவர்கள், அதற்கடுத்து மராட்டியம், உத்தரப்பிரதேச மாநிலங்களை சேர்ந்தவர்கள் என தற்போது வரை 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பாடத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.

இந்தியாவின் 111 நகரங்களில் உள்ள 116 தேர்வு மையங்களில் நேரடியாக தேர்வுகள் நடைபெறுகின்றன. ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத், இலங்கை ஆகிய நாடுகளிலும் தேர்வு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

அடுத்த மாதம் (செப்டம்பர்) ஆரம்பமாகும் டேட்டா சயின்ஸ் பாடத்திட்ட வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க வருகிற 19-ந் தேதி கடைசி நாளாகும். விருப்பமுள்ள மாணவர்கள் https://onlinedegree.iitm.ac.in என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட தகவல் சென்னை ஐ.ஐ.டி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :

Source: https://www.dailythanthi.com/News/State/introduction-of-4-year-online-degree-program-at-iit-chennai-759732