Madras HC on Elephants: யானை வளர்க்க வேண்டுமா? வேற மாநிலத்திற்கு போங்க… – Zee Hindustan தமிழ்

சென்னைச் செய்திகள்

யானைகள் தொடர்பான வழக்குகளை விசாரித்த மெட்ராஸ் உயர் நீதிமன்றம், இது தொடர்பாக சில வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியிருக்கிறது. 

முன்னதாக, தமிழகத்தில் கோவில் யானைகள், வளர்ப்பு யானைகள், வனத்துறை யானைகள் என பல்வேறு விதமாக பராமரிக்கப்படும் யானைகளின் எண்ணிக்கை, அவற்றின் வயது, உடல்நிலை குறித்த அறிக்கையுடன், அவற்றின் வீடியோ பதிவையும் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என மெட்ராஸ் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்குகளை, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய சட்ட அமர்வு விசாரிக்கிறது.  

இதையடுத்து தமிழக அரசு இன்று நீதிமன்றத்தில் கால அவகாசம் கோரியது. ஆலயங்களின் கட்டுப்பாட்டில் 32 யானைகளும், தனியார் கட்டுப்பாட்டில் 31 யானைகளும், 67  யானைகள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், அவற்றை வீடியோ பதிவு செய்யும் பணிகள் நடந்து வருவதால், அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்தது.  

Also Read | கண்ணகி ஆணவக் கொலை வழக்கு; அண்ணனுக்கு தூக்கு, 12 பேருக்கு ஆயுள்

தமிழக அரசின் கால அவகாசக் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்கின் விசாரணையை அடுத்த மாதத்துக்கு தள்ளிவைத்தது. அதோடு, இனிமேல் தமிழகத்தில் தனியார் எவரும் யானையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கூடாது என்றும் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.

அதுமட்டுமல்ல, கடந்த ஐந்து ஆண்டுகளில் வளர்ப்பு யானைகள், கோவில் யானைகள், வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்த யானைகள் என யானைகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கைத் தவிர, ரிவால்டோ யானை தொடர்பான வழக்கையும், தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு விசாரித்தது.  
நீலகிரி மாவட்டத்தில் மசினகுக்டி பகுதியில் காயத்தில் அவதிப்பட்ட ரிவால்டோ என்ற யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் காட்டில் விடப்பட்டது. 

இதுதொடர்பாக விலங்கு உரிமை மற்றும் நலன்களில் ஆர்வம் கொண்ட இந்திய விலங்கு உரிமைகள் மற்றும் கல்வி மையம் அமைப்பின் அறங்காவலர் முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். 

Read Also | திண்டுக்கல்லில் தொடரும் பயங்கரம்; ஜவுளி வியாபாரி தலை துண்டித்து படுகொலை

காட்டுக்குள் விடப்பட்ட ரிவால்டோ யானை உணவு உண்பதில் சிரப்படுவதால், அதை முகாமுக்கு அனுப்பி சிகிச்சையளிக்க வேண்டும் என முரளிதரன் பொதுநலன் மனு தாக்கல் செய்திருந்தார்.

ரிவால்டோவின் நடமட்டம், உணவு உண்ணும் வீடியோ பதிவு ஆகியவற்றை வனத்துறை மற்றும் மனுதாரர் தரப்பினர் தாக்கல் செய்திருந்தனர். இரு தரப்பு வீடியோக்களையும் பார்த்த நீதிமன்றம், அதிகாரிகளின் நிபுணத்துவத்தை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், யானை, காட்டு வாழ்க்கைக்கு பழகிவிடும், மேலும் வன அதிகாரிகள் அதை கண்காணிப்பார்கள் என்றும் தெரிவித்தது.

மேலும் அடுத்த விசாரணையில் ரிவால்டோ, காடுகளில் எவ்வாறு உணவு உட்கொள்கிறது, எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து வீடியோவாக தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், யானையின் வழித்தடங்களில் மனிதர்களின் தலையீடுகள் இருக்கிறதா என்பதையும் கண்காணித்து உறுதி செய்யவேண்டும் என்றும் தெரிவித்தனர். இந்த வழக்கின் விசாரணை டிசம்பர் ஏழாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Read Also | பிரபல மகாபாரத பாடல், சுலோகங்களை பிசிறில்லாமல் பாடும் இஸ்லாமியர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source: https://zeenews.india.com/tamil/lifestyle/alert-no-individual-can-keep-elephants-under-their-control-in-tamil-nadu-madras-hc-371427