சென்னை மக்களை மகிழ்ச்சிப்படுத்திய குளிர்ந்த காற்றுடன் கூடிய வானிலை – Maalaimalar தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னை:

வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தின் வட மாவட்டங்களில் மிகப்பெரிய மழையை கொண்டுவரும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் அந்த குறைந்த காற்றழுத்தம் எந்த வேகத்தில் வலுவானதோ, அதே வேகத்தில் வலு இழந்து போனது. அதே சமயத்தில் தமிழக கடலோரத்தை நெருங்கிய இந்த குறைந்த காற்றழுத்தத்தால் சென்னை வானிலையில் மகிழ்ச்சிகரமான மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நேற்று பகல் முழுவதும் சென்னையில் மப்பும், மந்தாரமுமான வானிலை நீடித்தது. வழக்கத்தைவிட அதிகமான குளிர்காற்று வீசியது. சென்னை மக்களுக்கு நேற்று இது வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது.

பொதுவாக ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற கோடை வாசஸ்தலங்களில்தான் இத்தகைய குளிர்ந்த காற்று வீசும். வானம் எப்போதும் லேசான இருட்டுடன் இருக்கும். அந்த ரம்மியமான சூழ்நிலையை நேற்று சென்னை மக்கள் அனுபவித்தனர்.

சென்னையை மேலும் மகிழ்விக்கும் வகையில் இன்று காலையில் இருந்தும் அதேபோன்று ரம்மியமான வானிலைதான் நீடித்தது. நேற்று இரவு 7 மணிக்கே அதிகமான குளிரை மக்கள் உணர்ந்தனர். இன்று அதிகாலையிலும் கடுமையான குளிர் நீடித்தது.

இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் தலையில் காதை மூடிக்கொண்டு மப்ளர் அணிந்திருந்ததை காண முடிந்தது. அதிகாலையில் நடைபயிற்சி செல்பவர்கள் குளிர்ந்த காற்றை எதிர்கொண்டு சென்றனர்.

சென்னையில் கடந்த வாரம் பனிமூட்டம் அதிகமாக இருந்தது. கடந்த 2 நாட்களாக பனிபொழிவு குறைந்த நிலையில் சென்னை நகரம் ஊட்டி போன்று குளிர்ந்து போனது. ஆங்காங்கே பெய்த லேசான சாரல் மழைகள் குற்றாலத்தில் இருப்பது போன்று மனதுக்கு இதமான சூழலை உருவாக்கியது.

இன்றும் அதே போன்று தான் ரம்மியமான வானிலையை சென்னை மக்கள் அனுபவித்தனர். ஊட்டி, கொடைக்கானலை விட சென்னையில் இன்று அதிக குளிர் நிலவியதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னையுடன் ஒப்பிடும்போது பெங்களூரு நகரில் எப்போதும் அதிக குளிர் இருக்கும். ஒருவித குளிர்ந்த காற்று வீசிக்கொண்டே இருக்கும். நேற்றும், இன்றும் பெங்களூருவை மிஞ்சும் வகையில் அத்தகைய குளிர்ந்த காற்று வீசியது. சென்னை புறநகரில் உள்ள மக்களும் இந்த குளிர்ந்த காற்றை அனுபவித்தனர்.

வங்கக்கடலில் உருவாகி தமிழகத்தின் வட கடலோரத்தில் நெருங்கி இருக்கும் குறைந்த காற்றழுத்தம் காரணமாக காற்று வீசும் வேகத்திலும், திசையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. வடக்கு திசையில் இருந்து சென்னையை நோக்கி வீசும் குளிர்ந்த காற்று மிக அதிக அளவு உள்ளது. இந்த வடக்கு திசை காற்றுதான் சென்னையை குளிர வைத்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்னையில் 25 டிகிரி செல்சியசாக வெப்ப நிலை குறைந்துள்ளது. கடந்த 2002 நவம்பர் மாதம் 10-ந் தேதி சென்னையில் 24.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறைவாக இருந்தது. தற்போது அதற்கும் கீழாக வெப்பநிலை குறைந்திருப்பதால் சென்னை மக்கள் இன்று ‘ஜில்’லென்று இருந்தனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiVGh0dHBzOi8vd3d3Lm1hYWxhaW1hbGFyLmNvbS9uZXdzL3N0YXRlL3Blb3BsZS1oYXBweS13ZWF0aGVyLWNoYW5nZS1pbi1jaGVubmFpLTUzOTkxOdIBAA?oc=5