எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை நடத்த சென்னை ஐகோர்ட்டு எதிர்ப்பு – அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையில், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை நடத்த எதிர்ப்பு தெரிவித்து உள்ள சென்னை ஐகோர்ட்டு, மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு? என்று கேள்வி எழுப்பி உள்ளது. அத்துடன் அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இருக்கிறது.

சென்னை,

கொரோனா பாதிப்பின் காரணமாக தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ஏற்கனவே 2 முறை ஒத்திவைக்கப்பட்டது.

3-வது முறையாக, வருகிற 15-ந் தேதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான அட்டவணையும் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருவதால், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை நடத்த அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை நடத்துவதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பலர் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள். கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பரவும் இந்த காலத்தில் பொதுத்தேர்வு நடத்துவது சரியாக இருக்காது என்றும், எனவே தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதே கோரிக்கையுடன் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர்.

அப்போது, தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால், அரசு சிறப்பு பிளடர் சி.முனுசாமி, மனுதாரர் தரப்பில்

மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ:- எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 9.79 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். தனிமனித விலகலை கடை பிடிப்பதற்காக 12 ஆயிரத்து 690 தேர்வு மையங்களை அரசு அறிவித்து உள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதி மாணவர்களுக்காக சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால், தற்போது கொரோனா வைரஸ் தொற்றும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த தேர்வை நடத்தினால், வைரஸ் தொற்றினால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

நீதிபதிகள்:- இந்த தேர்வு மார்ச் மாதம் நடத்தப்பட வேண்டியது. ஏற்கனவே 2 மாதம் காலதாமதமாக நடைபெற உள்ளது. இனிமேலும் தேர்வை முடிவில்லாமல் தள்ளிவைக்க முடியுமா?

என்.ஆர்.இளங்கோ:- தேர்வு எழுத மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ளவில்லை. அவர்களுக்கு 15 நாட்கள் புத்தாக்க பயிற்சி வழங்க வேண்டும். அதன்பிறகு தேர்வு நடத்த வேண்டும். மத்திய அரசின் கல்வி வாரியம் ஜூலை மாதம்தான் தேர்வு நடத்துகிறது. பள்ளி, கல்லூரிகள் செயல்பட தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த காலகட்டத்தில் பொதுத்தேர்வை நடத்தினால், மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தேர்வு எழுத வரும் 30 சதவீத மாணவர்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில், அதாவது வைரஸ் பரவல் அதிகம் உள்ள பகுதிகளான தடை செய்யப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால்:- கொரோனா வைரஸ் மாணவர்களிடையே பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்து உள்ளது. பொதுத்தேர்வை நடத்த தடை கேட்டு ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகள் வருகிற 11-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு இருக்கின்றன. அந்த வழக்குகளுடன், இந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்க வேண்டும். அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த அறிக்கையை அன்று தாக்கல் செய்கிறோம்.

நீதிபதிகள்:- தேர்வு எழுத மாணவர்கள் வந்து செல்வதில் உள்ள பிரச்சினைகளை அரசு புரிந்துக் கொள்ள வேண்டும். தேர்வை ஏன் தள்ளிவைக்கக்கூடாது? மாணவர்களின் வாழக்கையோடு விளையாடக்கூடாது. பொதுத்தேர்வை நடத்த அரசு ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறது? கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அதிகரித்து கொண்டே வருகிறது. சுமார் 9 லட்சம் மாணவர்கள், 2 லட்சம் ஆசிரியர்களை தேவையில்லாமல் சிரமத்துக்கு உள்ளாக்கக் கூடாது. இந்த தேர்வை ஜூலை மாதம் நடத்தலாமே? சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகே பள்ளிகள், கல்லூரிகளை திறக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு இருக்கிறது. அந்த உத்தரவை தமிழக அரசு மீறி செயல்படுமா? இந்த நாட்டின் எதிர்கால தூண்களான மாணவர்களின் நலனைத்தான் முதலில் கருத்தில் கொள்ள வேண்டும்.

எஸ்.ஆர்.ராஜகோபால்:- பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் மாதம்தான் திறக்கப்படும். அதேநேரம், பொதுத்தேர்வுகளை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் ஏற்கனவே பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டுதான் வருகிற 15-ந் தேதி தேர்வு நடத்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

நீதிபதிகள்:- எங்களை பொறுத்தவரை மாணவர்களின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு இந்த வழக்கை பார்க்கிறோம். தேர்வை தள்ளிவைப்பது தொடர்பாக தமிழக முதல்-அமைச்சருடன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் விவாதித்து வருவதாக செய்திகள் வருகின்றன. இதில் தற்போதைய நிலை என்ன?

எஸ்.ஆர்.ராஜகோபால்:- இந்த ஆலோசனை நடந்து வருவதால், இந்த வழக்கை நாளைக்கு (இன்று) தள்ளிவைக்க வேண்டும்.

நீதிபதிகள்:- இதை ஏற்க முடியாது. இது தீவிரமான விஷயம். ஜூன் 15-ந் தேதி தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது. 9 லட்சம் மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த அனுமதிக்க முடியாது. கொரோனா தொற்று பரவல் குறைந்த பின் தேர்வு நடத்தலாம். பொதுத்தேர்வு நடத்துவது என்பது, ஊரடங்கின் போது ‘டாஸ்மாக்’ கடைகளை திறப்பது போல் அல்ல. தேர்வை தள்ளிவைக்கும் முடிவை அரசே எடுத்தால் நன்றாக இருக்கும். ஜூலை மாதம் 2-வது வாரத்தில் தேர்வு நடத்தலாமா? என்பது குறித்து பிற்பகல் 2.30 மணிக்கு அரசு தரப்பில் பதில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு கூறிய நீதிபதிகள், விசாரணையை பிற்பகலுக்கு தள்ளி வைத்தனர்.

பின்னர் பிற்பகலில் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்தபோது, அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜரானார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

அட்வகேட் ஜெனரல்:- எதிர்வரும் நாட்களில் தமிழகத்தில் 2 லட்சம் பேர் வரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாக நேரிடும் என விஞ்ஞானிகள் அறிக்கை அளித்து உள்ளனர். அதுவும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இந்த தொற்று அதிகம் பரவும் என்றும் கூறுகின்றனர். அதனால், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை நடத்துவதற்கு இதுவே சரியான காலமாகும். அதனால், தேர்வுக்கு தடை எதுவும் விதிக்கக்கூடாது. அறிவிக்கப்பட்ட தேதியில் தேர்வு நடத்தப்பட வேண்டும்.

நீதிபதிகள்:- ஊரடங்கு வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அந்த உத்தரவை மீறும் வகையில் மாநில அரசு இதுபோன்ற பொதுத்தேர்வை நடத்த முடியுமா?

உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு?
அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண்:- 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்கக் கோரி ஏற்கனவே 11 வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. அந்த வழக்குகள் எல்லாம் வருகிற 11- ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. 11 மாநிலங்கள் பொதுத்தேர்வை நடத்தி முடித்து விட்டன. அதனால், தமிழகத்திலும் தேர்வை நடத்த அனுமதிக்க வேண்டும். தேர்வை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியு உள்ளது. அனைத்து தேர்வு மையங்களும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்படும். மாணவர்கள் முக கவசம் அணிந்து வரவேண்டும். பாதுகாப்பு தொடர்பாக மத்திய அரசு அறிவித்துள்ள அனைத்து நடைமுறைகளையும் தீவிரமாக பின்பற்றி தேர்வுகள் நடத்தப்படும். இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.

நீதிபதிகள்:- தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பார்கள்? மாணவர்கள் உயிரிழந்தால் இழப்பீடு வழங்குவதைத் தவிர, மாணவர்கள் உயிருக்கு யார் உத்தரவாதம் அளிப்பார்கள்?

விஜய் நாராயண்:- தற்போது, மாணவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. இனி வரும் நாட்களில் தொற்று பரவல் அதிகமாகும் என்பதால், பின்னாளில் தேர்வு நடத்துவது ஆபத்தானது. தேர்வு தள்ளிவைக்கப்பட்டு நடத்தப்பட்டால் பேராபத்தாக அமையும்.

நீதிபதிகள்:- இது சுமார் 9 லட்சம் மாணவர்களின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம். மாணவர்களின் தலைக்கு மேல் கத்தி தொங்குவதை பார்க்க முடிகிறது. மாணவர்கள், ஆசிரியர்களின் உயிர் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் அரசு ஒரு ஆபத்தான முடிவை எப்படி எடுக்க முடியும்? இந்த தேர்வை ஜூலை மாதம் நடத்தலாமே?  இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

அதன்பிறகு நீதிபதிகள், பொதுத்தேர்வை தள்ளிவைக்க முடியுமா? என பரிசீலிக்க வேண்டும் என்றும், அதேநேரம், தேர்வை நடத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

பின்னர் வழக்கு விசாரணையை வருகிற 11-ந் தேதிக்கு (வியாழக்கிழமை) ஒத்திவைத்தனர்.

Source: https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/09051551/SSLC-To-hold-a-general-election-Madras-High-court.vpf