சென்னையில் பொது இடத்தில் இறைச்சிக்காக விலங்குகளை வெட்டத் தடை: சென்னை மாநகராட்சி அறிவிப்பு – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னையில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட இறைச்சிக் கூடங்களில் மட்டுமே விலங்குகளை வெட்ட வேண்டும். பொது இடங்களில் வெட்டக்கூடாது. இது நாளை பக்ரீத் பண்டிகைக்கும் பொருந்தும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட அறிவிப்பு:

“அரசால் அங்கீகரிக்கப்பட்ட, அனுமதிக்கப்பட்ட மற்றும் உரிமம் பெறப்பட்ட இறைச்சிக் கூடங்களில் மட்டுமே இறைச்சிக்காக விலங்குகள் வெட்டப்பட வேண்டும். 1961 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சட்டத்தின் படி, இறைச்சிக் கூடங்கள் தவிர்த்து பிற இடங்களில், மத நிகழ்வுகளின்போதும், வழிபாடுகளின்போதும் இறைச்சிக்கென விலங்குகள் வெட்டப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, வியாபாரிகளும் பொதுமக்களும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு முழு ஒத்தழைப்பு தர வேண்டும்.

ஜூலை 30/ 2020 தேதியிட்ட, (WP.No.10043, 2020) வழக்கில் உயர் நீதி மன்றத்தின் இடைக்கால உத்தரவின்படி, அரசால் அங்கீகரிக்கப்பட்ட, அனுமதிக்கப்பட்ட மற்றும் உரிமம் பெறப்பட்ட இறைச்சிக் கூடங்களில் மட்டுமே இறைச்சிக்காக விலங்குகள் வெட்டப்பட வேண்டும்.

1961 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சட்டத்தின் படி, இறைச்சிக் கூடங்கள் தவிர்த்து பிற இடங்களில், மத நிகழ்வுகளின்போதும், வழிபாடுகளின்போதும் இறைச்சிக்கென விலங்குகள் வெட்டப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது. அது ஆகஸ்டு 1/2020 (நாளை) கொண்டாடப்படுகின்ற பக்ரீத் பண்டிகைக்கும் பொருந்தும்.

எனவே, வியாபாரிகளும், பொதுமக்களும் உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி இறைச்சிக் கூடங்கள் தவிர்த்த பிற இடங்களில் சட்டத்திற்குப் புறம்பான வகையில் இறைச்சிக்கென விலங்குகள் வெட்டக்கூடாதென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கப்படுகிறார்கள். எனவே, வியாபாரிகளும் பொதுமக்களும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு முழு ஒத்தழைப்பு தர வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்”.

இவ்வாறு சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/567522-prohibition-of-slaughtering-animals-for-meat-in-public-places-in-chennai-chennai-corporation-announcement.html