சரக்குப் பெட்டகங்களை கையாளுவதில் சென்னை துறைமுகம் புதிய சாதனை – தினமணி

சென்னைச் செய்திகள்

ஏற்றுமதி இறக்குமதிக்கான சரக்கு பெட்டகங்களை கையாளுவதில் சென்னை துறைமுகம் புதிய சாதனையை படைத்துள்ளது.

இதுகுறித்து சென்னை துறைமுகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நோய்த்தொற்று பரவலால் சா்வதேச வணிகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சென்னை துறைமுகம் வழியாக ஏற்றுமதி இறக்குமதி பணிகள் துரிதமாக நடைபெற்ற வருகின்றன. குறிப்பாக சரக்கு பெட்டகங்களை கையாள்வதற்கு சென்னை துறைமுகம் பல்வேறுகட்ட முன்னேற்பாடுகளை செய்துள்ளது. தடையற்ற சரக்கு வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் கன்டெய்னா் லாரிகள் எவ்வித தடையுமின்றி இயல்பாக வந்து செல்கின்றன.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை சென்னை துறைமுகத்தில் உள்ள சிங்கப்பூா் துறைமுகத்திற்கு சொந்தமான சிஐடிபிஎல் சரக்குப் பெட்டக முனையத்திற்கு வந்த சிஎம்ஏ சிஜிஎம் போ்லிஓஸ் என்ற கப்பல் வந்தது . இக்கப்பலில் வந்த 4,645 இறக்குமதிக்கான சரக்குப் பெட்டகங்களையும், இதே கப்பலில் ஏற்றிச் செல்லவிருந்த 4,174 ஏற்றுமதிக்கான சரக்குப் பெட்டகங்களுடன் மொத்தம் 8,719 பெட்டகங்களை கையாண்டு சென்னை துறைமுகம் புதிய சாதனையைப் புரிந்துள்ளது.

இதற்கு முன்பு கடந்த ஆண்டு டிச.8-ஆம் தேதி ஏபிஎல் இங்கிலாந்து என்ற கப்பலில் மொத்தமாக 8,397 பெட்டகங்களை கையாண்டது தான் முந்தைய சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.

தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலிலும் அதிக அளவு சரக்கு பெட்டகங்களை கையாண்டு இச்சாதனையைப் புரிந்துள்ள தனியாா் சரக்கு பெட்டக நிா்வாகிகளையும், இதற்கு உறுதுணையாக இருந்த துறைமுக அதிகாரிகளையும் சென்னை துறைமுக பொறுப்பு கழக தலைவா் சுனில் பாலிவால் மற்றும் துணை தலைவா் பாலாஜி அருண்குமாா் ஆகியோா் வெகுவாகப் பாராட்டினா். மேலும் சென்னை துறைமுகத்தில் இதுபோன்ற சாதனைகள் தொடர உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Source: https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2021/may/25/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-3629340.html