சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்றத்தை மறு பரிசீலனை செய்க – தீர்மானம் நிறைவேற்றம் – tv.puthiyathalaimurai.com

சென்னைச் செய்திகள்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியின் இடமாற்ற பரிந்துரையையும், நீதிபதி சிவஞானம் இடமாற்றம் செய்யப்பட்டதையும் மறு பரிசீலனை செய்ய வேண்டுமென மெட்ராஸ் பார் அசோசியேசன் அவசரப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து கொல்கத்தாவிற்கு இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதி சிவஞானம் இடம் மாற்றத்தையும், மேகலாயாவிற்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை இடமாற்றம் செய்யும் பரிந்துரையையும் மறுபரிசீலனை செய்யக் கோரி தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுமென மூத்த வழக்கறிஞர் வி.ரங்கபாஷ்யம் தலைமையிலான 4 பேர் கொண்ட எம்.பி.ஏ.-வின் இடைக்கால நிர்வாக குழுவிற்கு கடிதம் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று காணொலி காட்சி மூலம் மெட்ராஸ் பார் அசோசியேசன் அவசர பொதுக்குழு கூட்டப்பட்டது. அதில் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், பி.எஸ்.ராமன், என்.ஜி.ஆர்.பிரசாத், வி.பிரகாஷ், பார்த்தசாரதி, ஜி.கார்த்திகேயன், ஆதிலட்சுமி லோகமூர்த்தி, ஷான் கட்டாரி வி.ஆர்.கமலநாதன் உள்ளிட்ட 92 பேர் கலந்து கொண்டனர்.

image

அதில் பேசிய வி.பிரகாஷ், என்.ஜி.பிரசாத், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ஷான் கட்டாரி, முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரவிந்திரன் ஆகியோர் தீர்மானத்தை ஆதரித்து பேசினர். உரிய காரணங்கள் இல்லாமலும், அவற்றை வெளிப்படுத்தாமல் இடமாற்றங்களை செய்யக்கூடாது என வலியுறுத்தினர். முன்னாள் உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.கார்த்திகேயன் பேசும்போது சில இட மாற்றங்களை ஏற்பதும், சிலவற்றை எதிர்ப்பதும் கூடாது என்றும், கொலீஜிய பரிந்துரைகள் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார். கூட்டத்தில் கலந்துகொண்ட 92 பேரில் ஒருவரை தவிர மற்றவர்கள் ஏற்றதால், தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Source: https://www.puthiyathalaimurai.com/newsview/122091/Madras-Bar-Association-Emergency-General-Body-has-passed-a-resolution-seeking-reconsideration-of-the-transfer-recommendation-of-Chennai-High-Court-Chief-Justice-Sanjib-Banerjee-and-the-transfer-of-Justice-Sivagyanam