கட்டிட திட்ட அனுமதி விண்ணப்பம் 30 நாட்களுக்கு மேலாக நிலுவையில் இருந்தால் புகார் அளிக்கலாம்: சென்னை மாநகராட்சி – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: கட்டிட திட்ட அனுமதி விண்ணப்பம் 30 நாட்களை கடந்து நிலுவையில் இருந்தால் புகார் அளிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெறப்பட்ட கட்டிட திட்ட அனுமதிக்கு மாறாக கட்டப்படும் கட்டிடங்கள் மற்றும் திட்ட அனுமதி பெறாமால் கட்டப்படும் கட்டிடங்களின் மீது நடவடிக்கை எடுக்க தொடர்புடைய வார்டு உதவி பொறியாளர் அல்லது இளைநிலை பொறியாளர், பகுதி உதவி செயற்பொறியாளர், மண்டல செயற்பொறியாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கி சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உத்தரவிட்டார்.

இதன்படி தொடர்புடைய பொறியாளர்கள் தங்கள் பகுதிகளிள் கட்டுமான பணி நடைபெறும் இடங்களுக்குச் சென்று கட்டுமான நிலையிலேயே கண்டிப்பாக ஆய்வு செய்து கட்டிட திட்ட அனுமதி உள்ளதா எனவும், அனுமதிப்படி கட்டுமானம் நடைபெறுகிறதா என்பதையும் கண்காணிக்க என்று அறிவுறுத்தப்பட்டது.

இந்த ஆய்வின்படி கட்டிட திட்ட அனுமதி இல்லாத கட்டடங்கள் மற்றும் திட்ட அனுமதிக்கு மாறாக கட்டுமானம் நடைபெறும் கட்டிடங்களின் கட்டுமான பணியை கட்டுமான நிலையிலேயே நிறுத்த நோட்டீஸ் வழங்க உத்தரவிடப்பட்டது

திட்ட அனுமதி இல்லாத கட்டிடங்கள் மற்றும் திட்ட அனுமதிக்கு மாறாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களில் நுழைவுவாயில் கதவுகள் மற்றும் ஜன்னல்களை அகற்ற நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த உத்தரவின்படி சென்னையில் இதுவரை 2,075 கட்டிங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில் 467 கட்டிங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், “விதிமீறல் கட்டிடம் தொடர்பாக சென்னை மாநகராட்சி தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது கண்டறியப்பட்டுள்ள 467 கட்டிங்களுக்கு நோட்டீஸ் அளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீசை எதிர்த்து அவர் நகர்புற வளர்ச்சி துறையில் மேல்முறையீடு செய்யலாம். இந்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

குறிப்பாக திட்ட அனுமதி தொடர்பான விண்ணப்பங்களின் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவரும். சம்பந்தபட்ட அதிகாரி 30 நாட்களுக்குள் திட்ட அனுமதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மீறி 30 நாட்களுக்கு மேல் திட்ட அனுமதி தொடர்பான விண்ணப்பம் நிலுவையில் இருந்து பொதுமக்கள் முன்வந்து ரிப்பன் மாளிகைளில் புகார் அளிக்கலாம். இந்த மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/801865-if-the-project-permit-application-is-pending-after-30-days-a-complaint-can-be-lodged-chennai-corporation.html