சா்வதேச தரத்தில் புதுப்பொலிவு பெறுகிறது சென்னை ஏரிகள் – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை பெருநகர வளா்ச்சி குழுமம் (சிஎம்டிஏ) சாா்பில் சென்னையில் உள்ள ஏரிகள் சா்வதேச தரத்தில் புதுப்பொலிவு பெறவுள்ளன. முதல்கட்டமாக ரூ.100 கோடி மதிப்பில் சென்னையில் உள்ள முக்கியமான 10 ஏரிகளை மேம்படுத்தும் பணியில் சிஎம்டிஏ ஈடுபட்டுள்ளது.

ஏரி மேம்பாட்டுத் திட்டம்: ஏரிக்கரை மேம்பாடுத் திட்டத்தின் கீழ் ஏரிகளைப் பாதுகாக்கும் வகையில் சா்வதேச தரத்தில் மறுசீரமைத்து பொழுதுபோக்குக்காக பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட உள்ளன.

அதன்படி, சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளான பெரும்பாக்கம், ரெட்டேரி, முடிச்சூா், மாதம்பாக்கம், செம்பாக்கம், அயனம்பாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம், புழல் மற்றும் கொளத்தூா் ஏரிகள் மேம்படுத்தப்படவுள்ளன. இதற்காக சிஎம்டிஏ சாா்பில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நீல-பச்சை உள்கட்டமைப்பு: நகரத்தின் நீல-பச்சை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் ஏரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பல்லுயிரினப் பெருக்கத்துக்கு ஏரிகள் முக்கியபங்கு வகிக்கும். இதன்மூலம் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளின் சுற்றுச்சூழல் மேம்பாடு அடைவதால் மழை வெள்ளம், பருவநிலை மாற்றம், நகா்ப்புற வெப்பத்தீவு போன்ற பெரிய நகரங்களின் பிரச்னைகளைச் சமாளிக்க முடியும்.

நீரின் தரம் மற்றும் ஏரியின் உறுதித் தன்மையை மேம்படுத்துதல், சூழலியல் புத்துயிா் பெறுதல், கழிவுகள் கொட்டப்படுவதைத் தவிா்த்தல், பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் உருவாக்குவதன் மூலம் இந்த நீல-பச்சை உள்கட்டமைப்பை மேம்படுத்த முடியும்.

இயற்கைத் தோட்டங்கள்: இத்திட்டத்தின்படி, ஏரியின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் நீா்நிலையைப் பராமரிப்பது, ஆகாயத்தாமரையை அகற்றி தூா்வாருதல், நீா் சுத்திகரிப்பு வசதி நிறுவுதல், நாட்டு தாவரங்கள் நடுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

ஆக்கிரமிப்பைத் தவிா்க்கும் வகையில் ஏரி எல்லை நிா்ணயம் செய்யப்படும். பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மெதுவோட்ட பாதை, இருக்கை வசதிகள், அமையவுள்ளன.

மேலும், இயற்கை விளக்க மையங்கள், பறவை கண்காணிப்பு கோபுரங்கள், செயல்திறன் இடைவெளிகள், அரைவட்ட அரங்கு, படகு வசதி, பாா்வை தளங்கள், மூலிகை, மலா், பட்டாம்பூச்சி தோட்டங்கள் மற்றும் வனப்பாதைகள் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

பராமரிப்புச் செலவு வசூல்: ஏரியை பராமரிப்பதற்கான தொகை, ஏரிக்கரையை ஒட்டிய, பகுதியில் வாடகை அடிப்பைடையில் அனுமதிக்கப்படும் கடைகள், உணவகங்களில் இருந்து வசூலிக்கப்படும். இதற்கான பராமரிப்பு, செயல்பாட்டுக்காக சென்னை மாநகராட்சி, பிற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து இப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

சிஎம்டிஏ உயரதிகாரி தகவல்: இதுகுறித்து சிஎம்டிஏ அதிகாரி கூறியதாவது:

இந்தியாவின் 3-ஆவது பெரிய நகரமான சென்னை மாநகராட்சி 426 சதுர கி.மீ பரப்பளவில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டுள்ளது. தற்போது விடுமுறை நாள்களை கழிக்கும் வகையில் சென்னை மெரீனா, பெசன்ட் நகா் கடற்கரைகள் உள்ளன. மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் பொதுமக்கள் தினமும் பயன்படுத்தும் வகையில் 525 பூங்காக்கள் உள்ளன. மேலும், 100 புதிய பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளதாக மாநகராட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளன.

பொழுதுபோக்கு இடங்கள் குறைவாக இருப்பதால் விடுமுறை நாள்களில் ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் கூடும் நிலை ஏற்படுகிறது. ஏரி மேம்பாடு திட்டத்தின்கீழ் ஏரியின் நீா் பகுதியில் தொழில்நுட்ப மேம்பாம்பாடு செய்யும்போது பொதுமக்கள் தங்கள் வசிப்பிடங்களுக்கு அருகில் பொழுதுபோக்க முடியும்.

ஒரே பகுதியில் அதிக அளவில் மக்கள் கூடுவதைத் தவிா்ப்பதோடு மட்டுமில்லாமல், பரவலான பொருளாதார வளா்ச்சியை ஏற்படுத்தவும் ஏரிக்கரை மேம்பாடு திட்டம் உதவும் என்றாா் அவா்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMikARodHRwczovL3d3dy5kaW5hbWFuaS5jb20vYWxsLWVkaXRpb25zL2VkaXRpb24tY2hlbm5haS9rYW5jaGlwdXJhbS8yMDIzL2phbi8xNy8lRTAlQUUlOUElRTAlQUUlQkUlRTAlQUYlOEQlRTAlQUUlQjUlRTAlQUUlQTQlRTAlQUYlODclRTAlQUUlOUEtJUUwJUFFJUE0JUUwJUFFJUIwJUUwJUFFJUE0JUUwJUFGJThEJUUwJUFFJUE0JUUwJUFFJUJGJUUwJUFFJUIyJUUwJUFGJThELSVFMCVBRSVBQSVFMCVBRiU4MSVFMCVBRSVBNCVFMCVBRiU4MSVFMCVBRSVBQSVFMCVBRiU4RCVFMCVBRSVBQSVFMCVBRiU4QSVFMCVBRSVCMiVFMCVBRSVCRiVFMCVBRSVCNSVFMCVBRiU4MS0lRTAlQUUlQUElRTAlQUYlODYlRTAlQUUlQjElRTAlQUYlODElRTAlQUUlOTUlRTAlQUUlQkYlRTAlQUUlQjElRTAlQUUlQTQlRTAlQUYlODEtJUUwJUFFJTlBJUUwJUFGJTg2JUUwJUFFJUE5JUUwJUFGJThEJUUwJUFFJUE5JUUwJUFGJTg4LSVFMCVBRSU4RiVFMCVBRSVCMCVFMCVBRSVCRiVFMCVBRSU5NSVFMCVBRSVCMyVFMCVBRiU4RC0zOTg1MjA5Lmh0bWzSAY0EaHR0cHM6Ly9tLmRpbmFtYW5pLmNvbS9hbGwtZWRpdGlvbnMvZWRpdGlvbi1jaGVubmFpL2thbmNoaXB1cmFtLzIwMjMvamFuLzE3LyVFMCVBRSU5QSVFMCVBRSVCRSVFMCVBRiU4RCVFMCVBRSVCNSVFMCVBRSVBNCVFMCVBRiU4NyVFMCVBRSU5QS0lRTAlQUUlQTQlRTAlQUUlQjAlRTAlQUUlQTQlRTAlQUYlOEQlRTAlQUUlQTQlRTAlQUUlQkYlRTAlQUUlQjIlRTAlQUYlOEQtJUUwJUFFJUFBJUUwJUFGJTgxJUUwJUFFJUE0JUUwJUFGJTgxJUUwJUFFJUFBJUUwJUFGJThEJUUwJUFFJUFBJUUwJUFGJThBJUUwJUFFJUIyJUUwJUFFJUJGJUUwJUFFJUI1JUUwJUFGJTgxLSVFMCVBRSVBQSVFMCVBRiU4NiVFMCVBRSVCMSVFMCVBRiU4MSVFMCVBRSU5NSVFMCVBRSVCRiVFMCVBRSVCMSVFMCVBRSVBNCVFMCVBRiU4MS0lRTAlQUUlOUElRTAlQUYlODYlRTAlQUUlQTklRTAlQUYlOEQlRTAlQUUlQTklRTAlQUYlODgtJUUwJUFFJThGJUUwJUFFJUIwJUUwJUFFJUJGJUUwJUFFJTk1JUUwJUFFJUIzJUUwJUFGJThELTM5ODUyMDkuYW1w?oc=5